உள்ளூர் செய்திகள்

சிலை அழகி! (2)

சென்றவாரம்: மன்னர் பொறுப்பை ஏற்கும் முன், அண்டை நாட்டு விவரங்களை அறிய புறட்ட இளவரசன் மாணிக்கம், ஒரு மூதாட்டியை சந்தித்தான். குகையில் வசிக்கும் மந்திரவாதியை அடக்க வேண்டியதன் அவசியத்தை அவள் சொன்னாள். இனி - மூதாட்டியின் அறிவுரைப்படி, துரிதமாக செயலில் இறங்கினான், மாணிக்கம்.குகை வாசலில், ஐந்து தலை நாகம் சீறிப்பாய்ந்தது; மோதிர விரலைக் காட்டியதும், சுருண்டு படுத்தது.குகைக்குள், புயலென புகுந்தான் மாணிக்கம். பளிங்குச் சிலையாக நின்றவர்களைக் கண்டதும், செய்வதறியாது திகைத்தான். விந்திய நாட்டு இளவரசி சிலையாக நிற்பது கண்டு, ஸ்தம்பித்தான்; அவன் கற்பனை செய்திருந்த ராஜகுமாரி போலவே அந்த சிலை இருந்தது. ஆவல் பொங்க அதை தொட்டான்; கை பட்டதும் சிலை, உயிர் பெற்றது. சுயரூபத்தை அடைந்தாள் இளவரசி. எதிரில், அழகிய இளைஞனைக் கண்டு, வெட்கி தலை குனிந்தாள். மகிழ்ச்சியில், 'தாங்கள் யார்... இங்கு எப்படி வந்தீர்கள்... மந்திரவாதி வந்தால் உங்களையும் சிலையாக்கி விடுவான்...'எனவே, கவனமாக செயல்படுங்கள்... அவன் வரும் போது, சந்தேகம் எழாமல் இருக்கும் வகையில், சிலை போல் நின்று விடுகிறேன்; குகையின் மேல் பகுதியில் கண்ணாடிப் பேழை உள்ளது... 'அதில் உள்ள மந்திரக்கோலில் தான், மந்திரவாதியின் உயிர் உள்ளது. அதை கைப்பற்றி, மறைவாக இருங்கள்; அவன், உங்களை தாக்க முனைந்தால் மந்திரக்கோலை உடைத்து விடுங்கள்...'அடுத்த நொடியே மந்திரவாதி மடிந்து விடுவான்; உடனே குடத்தில் இருக்கும் மந்திர நீரை, இங்குள்ள சிலைகள் மீது தெளித்தால், உயிர்பெற்று சுயரூபம் அடைவர்...' என்று விளக்கமாக கூறினாள். அப்போது, மந்திரவாதி வரும் ஓசைக் கேட்டது. உடனே, மந்திரக்கோலுடன், குகையின் ஒரு மூலையில் பதுங்கிக் கொண்டான் மாணிக்கம்.உள்ளே நுழைந்த மந்திரவாதி, கண்ணாடிப் பேழையில், மந்திரக்கோலை காணாது, அச்சமுற்று, அலை பாய்ந்தான். சிலை போல் நின்ற ராஜகுமாரியை உற்றுப் பார்த்தான்.அவள் உயிருடன் நிற்பதைக் கண்டு, 'துரோகி... என்னை வஞ்சித்துக் கொல்லப் பார்க்கிறாயா... எங்கே என் மந்திரக்கோல்... சொல்லா விட்டால் கொன்று விடுவேன்...' என்று, கத்தியால் வெட்ட முயன்றான். அதைக் கண்ட மாணிக்கம், மந்திரக்கோலை உடைத்தான்; அந்த நொடியே, மந்திரவாதி தரையில் சாய்ந்து புரண்டான்.உடைத்த மந்திரக்கோலை, அருகே இருந்த ஓம குண்டத்தில் வீசினான், மாணிக்கம். அது தீயில் எரிந்த போது, மந்திரவாதி கதறியபடி உயிரை விட்டான்; ஐந்து தலை நாகமும் அந்த கணமே மாண்டது.உடனே, மந்திர நீரை தெளித்து, சிலையாக நின்றவர்களை உயிர் பெறச் செய்தான். விந்திய நாட்டு மன்னனும், சுய ரூபம் பெற்றான். மகளைக் கண்டதும், கட்டித்தழுவி ஆனந்தக் கண்ணீர் விட்டான். முழு விவரத்தையும் தந்தையிடம் கூறினாள், ராஜகுமாரி. தங்களை காப்பாற்றிய மாணிக்கத்தை மெச்சி, மகளை மணம் புரிய வேண்டினான். மன்னனிடம், 'நீங்கள் முதலில் உங்கள் நாடு சென்று, மக்களை காணுங்கள். பின், தங்கள் மகளுடன், என் நாட்டுக்கு வாருங்கள். என் பெற்றோர் சம்மதத்துடன், திருமணம் செய்து கொள்கிறேன்...' என்றான் மாணிக்கம்.அனைவரும், மூதாட்டியின் குடிசைக்கு வந்தனர். அவரை சந்தித்து நன்றி கூறினர்; அறுசுவை விருந்து படைத்த மூதாட்டியை அழைத்து, நாட்டுக்கு திரும்பிய மாணிக்கத்தை, சிறப்பாக வரவேற்றார் மன்னர். வெற்றி விவரத்தை தந்தையிடம் விளக்கமாக கூறினான் மாணிக்கம்.அவன் வெற்றி பெற உதவிய மூதாட்டிக்கு, தக்க மரியாதை அளித்து, அரசு விருந்தினராக தங்க, எல்லா வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார் மன்னர்.நல்ல நாளில், விந்திய நாட்டு இளவரசியை மணமுடித்து, மன்னராக பொறுப்பேற்றான் மாணிக்கம். மகிழ்ச்சியடைந்தனர் மக்கள்.குழந்தைகளே... இளவரசனின் அயராத முயற்சியால், சிலையாக நின்றவர்கள் மீண்டனர். முயற்சி திருவினையாக்கும் என்பதை இந்த கதை உணர்த்துகிறது. எடுக்கும் காரியங்களை, தீவிரமாக முயன்று வெல்லுங்கள்.முற்றும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !