இளஸ்... மனஸ்... (49)
அன்பு சகோதரி ஜெனிக்கு, உங்கள் அன்பு சகோதரி எழுதி கொண்டது. நீங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லும் விதம், எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் தான் உங்களிடம் என் பிரச்னையை பகிர்ந்து கொள்கிறேன்.எங்களுக்கு ஒரே மகள்; மேல்தட்டு வர்க்கத்தினர். +1 படிக்கிறாள். மிகச் சிறந்த அழகி. மாடர்னா டிரஸ் பண்ணி கொள்வாள். அவளது பீரோ முழுவதும் விதவிதமான உடைகள் நிரம்பி வழியும். அவள் கேட்பதை எல்லாம் வாங்கி தருவோம். அவளை அழகு படுத்தி பார்ப்பதில் எங்களுக்கு அலாதி பிரியம். காரணம், படிப்பில் படுசுட்டி; எனவே, அவள் கேட்பதை எங்களால் மறுக்க முடியாது. பிரச்னை என்னன்னா, என் மகள் நார்மல் உயரம். மிக மிக உயரமான குதிகால் செருப்புகளை போடுகிறாள். டிரஸ்க்கு ஏத்த மாதிரி பல விதங்களில் போடுவாள். இப்பவே, குதிகால் உயர செருப்பை ரொம்ப போடாதே... அது உன் உடல்நலத்தை பாதிக்கும் என்று எவ்வளவோ சொல்லி விட்டேன்.அப்படி போடுவது தான், 'பேஷன்' என்று சொல்லி அடம் பிடிக்கிறாள். உங்கள் பகுதியை தோழியருடன் சேர்ந்து விரும்பி படிப்பாள். உங்கள் மீது மிகுந்த மதிப்பு உண்டு. அவள் மண்டையில் உறைப்பது போல் ஒரு, 'அட்வைஸ்' சொல்லுங்க சகோதரி!ஹ... ஹா... இந்த உலகத்தில் பெற்றோருக்கு தான் எத்தனை விதமான கவலைகள்... இந்த காலத்து இளசுகள் சினிமா நடிகைகள் மாதிரி உடை உடுத்துகின்றனர். அதற்கு அழகு கூட்டுவது, இந்த குதிகால் உயர செருப்பு... அதை போட்டு நடந்தால் தான் நடையும் அழகாக இருக்கிறது என்கின்றனர். இதை போடாத, விரும்பாத பெண்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.சரி... இந்த அட்வைஸ் உங்க மகளுக்கு... மகளே... நீ ஏற்கெனவே சரியான உயரத்தில் தான் இருக்கிறாய்; அழகியும் கூட. அதனால், முடிந்தவரை தட்டையான செருப்புகளை உபயோகி. அதில் தான் விதவிதமான வகைகளில், புதுப்புது வடிவங்களில் வருகின்றனவே. அது உனக்கு மிக மிக அழகாக இருக்கும். முடிந்த வரையில் குதிகால் உயர செருப்பு அணிவதை தவிர்த்து விடு. அவற்றை அணிவதால் பலவித பாதிப்புகள் ஏற்படும்.குறிப்பாக, ஒன் இன்ச் உயர செருப்பு அணியும் போது, முட்டி வலி உண்டாகும். அதில் இருந்து பரவும் வலியானது முதுகு தண்டுவடம் ஆரம்பிக்கும் இடம் வரையில் பரவி, எதிர்காலத்தில் உனக்கு முதுகு வலி பிரச்னையை உண்டு பண்ணும். அடுத்து, இரண்டு இஞ்ச் உயர செருப்பு அணிபவர்களுக்கு முட்டியில் இருந்து வலி பரவி, முகுது தண்டுவடத்தை பாதித்து அப்படியே இடுப்பில் உள்ள, 'டிஸ்க்'கை பாதிக்கும் அளவிற்கு சென்று விடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இன்னும் ஒருபடி மேலே போய், மூன்று இஞ்சில் குதிகால் உயர செருப்பு அணிந்து, 'நான் சினிமா நடிகைகள் போல் அழகு காட்டுவேன்' என்று நினைத்தால், இளம் வயதிலேயே முட்டி வலி, கழுத்துவலி, இடுப்பு வலி, ஸ்பைன் மற்றும் நம்மை சப்போட் பண்ற எல்லா எலும்புகளுமே பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் சொல்றாங்க. காரணம், குதிகால் உயர செருப்பு அணியும் போது, நம் உடலின் முழு எடையையும் பாதத்தின் முன் பகுதி தாங்குவதால், நம்மால் நேராக நிற்கக் கூட முடியாத நிலை ஏற்படும் என்று மருத்துவர்கள் சொல்கின்றனர்.மகளே... அது மட்டுமா... நம்முடைய பாதத்தின் இடையே ஒரு இடைவெளி உள்ளது. இந்த இடைவெளி கட்டாயமாக இருக்க வேண்டும். குதிகால் செருப்பு போடும்போது இந்த இடைவெளி இல்லாமல் போவதால், உன் உடலில் தேவையில்லாத வலிகள் ஏற்பட்டு உன்னோட ஆரோக்கியம் இளம் பருவத்திலேயே பாதிக்கப்படும் செல்லம்.ஒரு இஞ்ச் குதிகால் செருப்பு ஓ.கே., அதற்குமேல் இரண்டு, மூன்று இஞ்ச்க்கு போகும்போது தேவையில்லாத பாதிப்புகள் ஏற்படும். அதனால், தேவைப்படும் போது மட்டும் போட்டு கொண்டு, அவ்வப்போது கழட்டி வைத்துவிடுவது நல்லது. மற்ற நேரங்களில் பட்டை செருப்புகள் பயன்படுத்தி ஆரோக்கியமாக இரு; அழகு சில காலம் தான் நம்முடன் இருக்கும். ஆனால், ஆரோக்கியம் என்பது நம் வாழ்நாள் முழுவதுமான பிரச்னை அல்லவா... அதனால் தான் உன் செல்ல மம்மி ரொம்ப கவலைப்படுறாங்க...'மம்மி நீ சொல்ற மாதிரி எப்பவாச்சும் உயரமான குதிகால் செருப்பு போட்டுக்கறேன்'னு சொல்லி அவங்கள கட்டிபிடிச்சி ஒரு, 'உம்மா' கொடு சரியா...நீதான் அவர்களின் உலகம் என்று நினைக்கிற பெற்றோர் சொல்வதை கேட்டு நட; அது உனக்கும் எப்பவும் நல்லது!அன்புடன்,ஜெனிபர் பிரேம்.