உள்ளூர் செய்திகள்

மாவீரன், அலெக்ஸாண்டர்! (2)

இதுவரை: கிரேக்க நாட்டு மன்னராவதில் போட்டி ஏற்பட்டது. மாமன்னர் பிலிப் கொல்லப்பட்டார். இனி-அரியணை காலியானதும் கிளியோபாட்ரா தன் மகனை அரசனாக்கத் துடித்தாள்; அவளுடைய மகனோ பாவம் அப்பாவிச் சிறுவன். நடந்ததையெல்லாம் பார்த்துக்கொண்டு அலெக்ஸாண்டர் சும்மாயிருக்கவில்லை. தனது அரசுரிமையை அடுத்தவர்கள் பறிக்க நினைக்கலாமா... தடுக்க யார் வந்தாலும் சரி ஒழித்துக்கட்டாமல் விடப்போவதில்லை. ஆத்திரத்துடன் தனது ஆதரவாளர்களைத் திரட்டி வந்து கிளியோபாட்ராவின் மகனை அலெக்ஸாண்டர் தீர்த்துக் கட்டினான். அவளுக்கு ஆதரவாக இருந்த தளபதி அட்லசையும் காலி செய்தான்.இன்னும் ஓர் ஆள் பாக்கி. அது அலெக்ஸாண்டரின் பெரியப்பா மகன் அமின்டாஸ். அவனிடமிருந்துதான் அதிகாரத்தை பிலிப் பறித்துக் கொண்டார். ஏற்கனவே பல் பிடுங்கின பாம்புதான் அமின்டாஸ். ஆனாலும் ஏதாவது வாய்ப்பைப் பயன்படுத்தி ஆட்சிக்குப் பங்கம் விளைவித்தால் என்னாவது?எதிரிகளை இருந்த இடம் தெரியாமல் துடைத்து ஒழித்துவிடுவதுதான் சரியானதாகப்பட்டது அலெக்ஸாண்டருக்கு. அமின்டாஸ் கதையும் முடிக்கப்பட்டது. பதவிவெறியில் இப்படி இரக்கமற்ற கொலைகளைச் செய்து மாசிடோனியா அரியணையைக் கைப்பற்றியபோது மன்னர் அலெக்ஸாண்டருக்கு வயது வெறும் இருபதுதான்.மாசிடோனிய இளவரசர்கள் சும்மா அந்த அந்தஸ்தைப் பெற்றுவிட முடியாது. வீரத்துக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்தால்தான் ஆச்சு. இல்லாவிட்டால், பதவியும் கிடையாது; பட்டத்து இளவரசரும் ஆகமுடியாது. அதற்கு இரண்டு விதிகள் உண்டு.முதலில் ஒரு மூர்க்கத்தனமான கரடியைக் கொல்ல வேண்டும். அடுத்தது ஒரு வீரனுடன் சண்டையிட்டு அவனைக் கொல்ல வேண்டும். இதுதான் அந்த விதிகள். இதைச் செய்தால்தான் ஆம்பளை சிங்கம்! மாசிடோனியாவின் இளவரசன் என்று எல்லாம் ஏற்றுக் கொள்வர். அதற்கு அங்கிகாரமாக ஒரு பிரத்யேக இடுப்பு பெல்டை அடையாளச் சின்னமாக அணிந்து கொள்ளத் தருவர்.அதுமட்டுமல்ல, மாசிடோனிய அறிஞர்கள் சபையில், அவன் அடக்கத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்திருப்பதற்குப் பதிலாக சற்று ஒய்யாரமாகச் சாய்ந்து அமர்ந்து கொள்ள முடியும்.அலெக்ஸாண்டரின் தந்தை பிலிப், வீரத்தில் சிறந்தவன்; அவனது வாரிசாக வேண்டுமென்றால் அத்தனை சுலபமா... தன்னை தகுந்த வாரிசாக நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அலெக்ஸாண்டருக்கு இருந்தது. அலெக்ஸாண்டர் வெகு எளிதாக ஒரு கரடியைக் கொன்று போட்டான். கரடியைக் கொன்றதில் அவனுக்கு வேட்டை ஆர்வம் தொற்றிக்கொண்டது. மிகவும் ஆர்வத்துடன் சிங்கம், கரடி போன்ற பயங்கர காட்டு விலங்குகளை எளிதில் கொன்று குவித்தான்.''பதினான்கு வயதுக்குப் பிறகே மனிதனைப் போரிட்டுக் கொல்லும் வாய்ப்பு வழங்கப்படும்,'' என்பதால், காத்திருந்தான் அலெக்ஸாண்டர். சண்டை மட்டுமல்ல; வேறு சில கலைகளும் அலெக்ஸாண்டருக்கு அத்துபடி. மேலும், நாடகங்கள் பார்க்கப் பிடிக்கும். கவிதைகளில் ரொம்பவே ஈடுபாடு உண்டு. 'லைர்' என்ற யாழ் வாத்தியத்தை நன்றாக வாசிப்பான். 'அவுலாஸ்' என்ற கிரேக்க நாட்டு இசைக் கருவியை திறமையாகக் கற்றிருந்தான். நம்ம ஊர் சிலம்பாட்டம் போன்று மாசிடோனியாவிலும் ஒரு கலை உண்டு. சிலம்பை எடுத்தால் எதிரில் எவரும் நின்று அலெக்ஸாண்டருக்கு நிகராக விளையாட முடியாது. அலெக்ஸாண்டருக்கு தொடக்கக் கல்வியைக் கற்றுத் தருவதற்காக லியோனிடஸ் என்ற அறிஞர் நியமிக்கப்பட்டிருந்தார். இவர் அலெக்ஸாண்டருடைய தாய் வழி உறவினர். லியோனிடஸ் கண்டிப்புக்குப் பேர் போனவர். அலெக்ஸாண்டரை தனது சொந்தப் பிள்ளைகளைப் போலவே கருதி அக்கறையுடன் பாடங்களைச் சொல்லித் தந்தார் லியோனிடஸ். அலெக்ஸாண்டாருக்கும் அவர் மீது கொள்ளைப் பிரியம். தந்தை பிலிப்புடன் இருப்பதைக்காட்டிலும் லியோனிடஸிடம் தான் அதிகம் பொழுது போனது.அதேபோல, இன்னொரு ஆசிரியரிடமும் மிகவும் அன்பு பாராட்டுவான் அலெக்ஸாண்டர். கிட்டத்தட்ட அலெக்ஸாண்டர் இப்படித்தான் வரவேண்டும் என்று தனது மனதில் வடித்துக்கொண்டு அவனது ஒவ்வொரு விஷயத்திலும் ஈடுபாடு காட்டினார் லியோனிடஸ். சண்டையில் இருந்து சாப்பாடு வரை சகலத்தையும் அவரே தன் மேற்பார்வையில் வைத்துக் கொண்டார். அலெக்ஸாண்டரின் உடற்பயிற்சிக்குத் தகுந்தபடி ஸ்பெஷல் மெனுவை அரண்மனை சமையல்காரர் களிடம் சொல்லிக் கொடுத்தார்.வலிமை மிக்க வீரனாக, உருவாவதற்கு, உடல் ஆரோக்கியம் தானே அடிப்படை... உடம்பைத் திடப் படுத்த உடற்பயிற்சியிலும், மனதைத் திடப்படுத்த தியானத் திலும் அலெக்ஸாண்டரை ஈடுபடுத்தினார். நல்ல பழக்க வழக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார்.படிப்பைப் பொறுத்தவரை உலக அறிவு, இலக்கியம், இலக்கணம் என்று அனைத்தும் அலெக்ஸாண்டருக்குப் போதிக்கப்பட்டன.அலெக்ஸாண்டர் இயல்பிலேயே பச்சைக் கற்பூரம். எந்த விஷயத்தை எடுத்துச் சொன்னாலும் பளிச்சென புரிந்து கொள்வான். ஒவ்வொன்றையும் முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அவன் ஆசிரியர் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்றுக்கொண்டு விடமாட்டான்.ஏன், எதற்கு, எப்படி என்று குறுக்குக் கேள்விகளைக் கேட்டு தெள்ளத் தெளிவாக எதையும் புரிந்து கொண்ட பின்பே ஏற்றுக் கொள்வான். லியோனிடஸ், அலெக்ஸாண்டர் உறவினர் என்பதற்காகவோ, இளவரசன் என்பதற்காகவோ அவனுடைய போக்கில் விட்டுவிடவில்லை. அவர் கண்டிப்பானவர். அவனிடம் குறை கண்ட போது சுட்டிக் காட்டவும், தட்டிக் கேட்கவும் செய்வார்.எட்டு வயது முதல் அலெக்ஸாண்டருக்கு லியோனிடஸ் கற்றுக் கொடுத்த நுணுக்கங்கள்தான் பிற்காலத்தில் அவனை சிறந்த ஆட்சியாளனாக ஆக்கியது என்று சொன்னால் தப்பில்லை.-தொடரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !