குண்டு ராஜா!
ஜோக்கிஸ்தான் நாட்டு அரசவை கூடியது. சிம்மாசனத்தில், கோபத்துடன் வீற்றிருந்தான் மன்னன் குய்யோ முறையோ.மன்னனின் கோபம், முட்டாள் தனத்தை நன்கு அறிந்த அமைச்சர் அப்பிராணியார், 'என்ன செய்வது' என தவித்து நின்றார். கோபம் தணியாமல், 'அவையில் சில நாட்களாக, ஒரே கேள்வியை தான் கேட்கிறேன். ஒருவர் கூட பதிலளிக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. என் பிரச்னையை, தீர்க்காத அமைச்சர்களை எண்ணி வெட்கப்படுகிறேன்...' என்றான் மன்னன்.'மன்னரின் பிரச்னையை நன்கு அறிவோம். எடை அதிகரித்து, மிகவும் குண்டாகி விட்டீர். நடந்தால், பானை உருள்வது போல் உள்ளது. எடையை குறைக்க, தக்க வழிமுறையை கண்டறிய ஒரு யோசனை கூறுகிறீர்...''ஏன்... என் யோசனை எடுபடவில்லையா...''எடுபடாது என்றில்லை மன்னா...'இழுத்தார் அமைச்சர்.'அப்புறம் ஏன் தாமதிக்கிறீர்...'கடிந்தான் மன்னன்.'நாட்டில் ஒல்லியான தேகம் உடையோர், உங்கள் எடையை, ஆளுக்கு கொஞ்சம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்கிறீர்; அது, நடைமுறை சாத்தியமில்லை...''எனக்கு வேண்டாத பொருளை பலருக்கு தானம் செய்துள்ளேன். அது போல், உடல் மெலிந்துள்ளோருக்கு, என் உடல் எடையை பிரித்துக் கொடுக்க போகிறேன். இது, ஏன் சாத்தியமாகாது; உங்களுக்கு தான், நான் கூறும் யோசனை பற்றி தெரியவில்லை...'நேரத்தை வீணாடிக்காமல், உடல் எடையை பெற்றுக் கொள்ளும் நபர்களை தேடி கண்டுபிடித்து, எப்படி என் எடையை அவர்களிடம் சேர்ப்பது என்பதை அறிந்து வாருங்கள்...' கூறியபடி மெல்ல உருண்டவாறே வெளியேறினான் மன்னன்.'ஒருவரின் உடல் எடையை, மற்றவர் எப்படி பெற முடியும்; மன்னர் கூறுவதில், நியாயம் இல்லையே' என எண்ணி, பேச தைரியம் இன்றி, எழுந்து நின்றனர் அவையோர்.குழம்பியிருந்த வேளையில் நாட்டுக்கு ஒரு துறவி வந்துள்ளதை அறிந்து சந்திக்க சென்றார் அமைச்சர். முக வாட்டம் கண்டு பரிவுடன் விசாரித்தார் துறவி.மன்னனின் விசித்திரமான கட்டளையை விவரித்தார் அமைச்சர்.'இது என்ன பிரமாதம். எனக்கு தெரிந்த ஐந்து துறவிகளை இதற்கு சம்மதிக்க வைக்கிறேன். நான் கூறும் யோசனையை மன்னரிடம் தெரிவியுங்கள்; அவர் நினைத்தபடி நடக்கும்...' துறவியின் யோசனையை செயல்படுத்த எண்ணி, விடை பெற்றார் அமைச்சர்.மறுநாள் -அரசவையில், மன்னன் கேட்பதற்கு முன், பேச்சை துவங்கினார் அமைச்சர்.'தாங்கள் எதிர்பார்த்தபடியே ஐவர், உங்கள் உடல் எடையை வாங்கிக் கொள்ள முன் வந்துள்ளனர். ஆனால், அதில் இரு சிக்கல்கள் உள்ளன...''பார்த்தீரா... நான், கூறியது போலவே, உடல் எடையை பெற கூடியோர் இருக்கின்றனர். அது சரி... அந்த சிக்கல் பற்றி கூறுங்கள்...''அந்த ஐவரும், ஊருக்கு வெளியே குடில் அமைத்து இருக்கும் துறவியர். அவர்கள் ஊருக்குள் வராமல், 100 நாட்கள் விரதம் மேற்கொண்டால் தான், உங்கள் எடையை, சிறிது சிறிதாக வாங்கிக் கொள்ள முடியுமாம்...''இதில் எந்த பிரச்னையும் எனக்கில்லை. என், உடல் எடையை வாங்கிக் கொள்வது தான் முக்கியம்; அவர்கள், எங்கிருந்தால் என்ன... இரண்டாவது சிக்கலை கூறுங்கள்...''உங்கள் உடல் எடையை அவர்கள் வாங்கிக் கொள்வதால், நீங்கள் உதவி பெறுபவர். அவர்கள் தான் உதவி புரிபவர். தினமும், 100 நாட்கள் நடந்து சென்று, அவர்களின் கரங்களை தொட்டு வர வேண்டும்; அப்படி செய்தால் தான், தங்கள் உடல் எடையை அவர்களால் வாங்கிக் கொள்ள முடியுமாம்...'பயத்துடன் எடுத்து கூறினார் அமைச்சர்.'இது என் முதல் வெற்றி. இந்த செய்தியை முன்கூட்டியே எடுத்து கூறினேன். அதை யாரும் நம்பவில்லை; என் புத்திசாலிதனத்தை நிரூபிக்க, இது ஒரு வாய்ப்பு. மனிதரின் உடல் எடையை, பிறருக்கு வழங்க கூடிய வழியை செயல்படுத்திய முதல் மன்னன் என்ற புகழ் எனக்கு கிடைக்கும். இந்த ஏற்பாட்டுக்கு சம்மதிக்கிறேன்...' பெருமிதத்துடன் கூறினான் மன்னன்.அடுத்த நாள் முதல் நடந்து சென்று நாட்டின் எல்லையில் தங்கியிருந்த துறவியர் கைகளை தொட்டு வரத் துவங்கினான் மன்னன். ஆரம்பத்தில் கடினமாக இருந்தது. எடை மாற்று யோசனை குறித்த பெருமிதம், துவண்டு விடாமல் தொடர்ந்து செய்யத் துாண்டியது. பழக, பழக நடப்பது பிடித்தது மன்னனுக்கு.ஐந்து துறவியருக்கும் காய், கனிகள் கொடுக்கப்பட்டது. அவர்கள் உடல் எடையும், பூசினாற் போல் சற்று பெருக ஆரம்பித்தது.'என் எடை, துறவிகளுக்கு இடம் மாறுகிறது' என எண்ணியபடியே ஒவ்வொரு நாளும் உற்சாகத்துடன் நடக்கத் துவங்கினான் மன்னன்.இப்படி, 100 நாட்கள் நடந்த பின், மன்னன் உடல் எடை நன்றாக குறைந்தது. மகிழ்ச்சியில், அமைச்சருக்கு பரிசுகள் வழங்கினான். உதவிய துறவிக்கு, மனதார நன்றி தெரிவித்தார் அமைச்சர்.பட்டூஸ்... புத்திசாலிதனத்துடன் சமயோசிதமாக செயல்புரிந்தால் பிரச்னைகளை தீர்க்கலாம்!- தஞ்சை ப்ரணா