உள்ளூர் செய்திகள்

கடிவாளம்!

நாகர்கோவில், எஸ்.எல்.பி., உயர்நிலைப் பள்ளியில், 1963ல், 10ம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம்!பள்ளி வாலிபால் குழுவில் இருந்தேன். ஒருநாள் விளையாடிய போது, கையில் காயம் ஏற்பட்டதால், 'பேன்டேஜ்' போடும் நிலை ஏற்பட்டது. கண்டிப்பு மிக்க வகுப்பாசிரியர் வில்சனிடம், என் காயத்தை காட்டி, 'மருத்துவமனை செல்கிறேன்...' என்று சொல்லி வகுப்புக்கு வருவதை ஒரு வாரம் தவிர்த்தேன். பள்ளி செல்வதாக பெற்றோரிடம் கூறி புறப்படுவேன். மனம் போன போக்கில் திரைப்படங்கள் பார்த்து பொழுது போக்கி, மாலையில் வீடு திரும்புவேன். கல்வி மீதான அக்கறை முழுதுமாக குறைந்தது. காலாண்டு தேர்வில் பெற்ற குறைந்த மதிப்பெண் என்னை காட்டிக் கொடுத்து விட்டது. பெற்றோரை அழைத்து வர சொன்னார் வகுப்பாசிரியர். சிறு வயதிலே தந்தையை இழந்திருந்ததால், தாயை அழைத்தேன். மிக கூச்ச சுபாவமுள்ள அவர், தயங்கியபடி வந்தார். அம்மா முன்னிலையில் நல்லறிவு புகட்டி, 'காரணமில்லாமல் விடுப்பு எடுக்க கூடாது. மனம் போன போக்கில் செயல்படாமல் படிப்பில் கவனம் செலுத்து...' என கண்டிப்புடன் சொன்னார் வகுப்பாசிரியர்.அதை ஏற்று, 'இனி இப்படி நடக்க மாட்டேன்...' என உறுதியளித்தேன். கவனம் செலுத்தி படித்து பொதுத்தேர்வில், 63 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன். தொடர்ந்து படித்து அரசு பணியில் சேர்ந்து வாழ்வில் உயர்ந்தேன். தற்போது, என் வயது, 76; பதிவு பெற்ற அரசு அலுவலராக பதவி உயர்ந்து, ஓய்வு பெற்றேன். வாழ்க்கையில் ஒளியேற்றிய அந்த வகுப்பாசிரியரை நன்றியுடன் பணிந்து வாழ்கிறேன்.- நா.கிருஷ்ணமூர்த்தி, கோவை.தொடர்புக்கு: 94435 66937


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !