மனப்பாடம்!
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத், இந்து மத பாடசாலையில், 1946ல், 5ம் வகுப்பு படித்த போது, வா.தி.மாசிலாமணி முதலியார் நிர்வாகம் நடத்திய வள்ளலார் இல்லத்தில் தங்கியிருந்தேன். வகுப்பு ஆசிரியர் பாலசுந்தரம் அன்பானவர். கண்டிப்பும், கடமை உணர்ச்சியும் உடையவர்.ஒரு சனிக்கிழமை, தமிழ் செய்யுளை விளக்கி, மனப்பாடம் செய்து திங்களன்று ஒப்புவிக்க கூறியிருந்தார். மறுநாள் மிதிவண்டி பழக சென்றதால், காலில் காயம்பட்டது. வேதனையால் அவதியடைந்ததால் செய்யுளை படிக்க இயலவில்லை.அன்றைய வகுப்பில் எல்லாரும் ஒப்பிவித்தனர். என்னை கேட்ட போது, 'மனப்பாடம் செய்ய முடியவில்லை...' என்று கூறினேன். அது கேட்டு, 'பொய் சொல்லதே...' என்று அடித்தார். மதிய இடைவேளையில் தனியே அழைத்து விசாரித்தார். நடந்ததை சொன்னேன்.மென்மையாக, 'இந்த உண்மையை முதலிலேயே சொல்லியிருக்கலாம் அல்லவா.... இங்கு படித்தோர் நல்ல பதவியில் உள்ளனர். இதை அறிந்து தான், உன் பெற்றோர் சேர்த்துள்ளனர். அதை பூர்த்தி செய். கடமையை தவறாமல் செய்ய பழகு...' என்று அறிவுரைத்தார். படிப்பில் சீராக கவனம் செலுத்தி முன்னேறினேன்.என் வயது, 88; ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். பள்ளியில் அந்த ஆசிரியரிடம் பெற்ற அறிவுரைகளை, என் மாணவர்களுக்கும் தவறாது கூறினேன். என் மாணவர்கள் ஒழுக்கத்தில் மேம்பட்டு பல துறைகளிலும் பணியாற்றி வருவது மகிழ்ச்சி தருகிறது. பள்ளியில் நடந்த சம்பவம் அடிக்கடி நினைவில் வந்து நெகிழ்ச்சி ஏற்படுத்துகிறது.- பி.ராஜரத்தினம், தேனி.தொடர்புக்கு: 90927 99835