முயற்சியால் உயர்வு!
விருதுநகர் மாவட்டம், குல்லுார்சந்தை, ஸ்ரீ வீரப்பா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில், 1990ல், 10ம் வகுப்பு படித்த போது வரலாறு, புவியியல் பாட ஆசிரியராக இருந்தார் சண்முகம். சற்று துாரத்தில் மெட்டுக்குண்டு கிராமத்திலிருந்து நடந்தே வருவார்.துாய்மையான வெள்ளை சட்டை, வேட்டி அணிந்திருப்பார். புன்னகை தவழும் முகத்துடன், இதமான சொற்களால் கற்பிப்பார். நல்வழிக்கு ஆலோசனைகள் சொல்வார். கோபத்துடன் பார்த்ததே கிடையாது. எத்தனை கடினமான பாடத்தையும் சலிப்பு தட்டாத வகையில் நடத்துவார். கவனம் பிசகாமல் பார்த்துக் கொள்வார்.வரலாற்று நிகழ்வுகளை காட்சி பூர்வமாக விவரிக்கும் போது சினிமா பார்ப்பது போல பிரம்மிப்பாக இருக்கும். அவர் வகுப்புக்காக தவம் இருப்போம். அன்று தைரியத்தை வரவழைத்தபடி, 'உங்களைப் போல ஆசிரியராக விரும்புகிறேன்...' என்றேன். மிகவும் கனிவுடன், 'முயற்சி செய். நிச்சயம் நடக்கும்...' என்று வாழ்த்தினார். அந்த வாக்கு பலித்தது.என் வயது, 49; சிவகங்கை மாவட்டம், கல்லல், முருகப்பா மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். பாடம் நடத்துவதிலும், மாணவர்களுடன் பழகுவதிலும் அந்த ஆசிரியரை முன்மாதிரியாக கொண்டு செயல்படுகிறேன். மனதில் நீங்காமல் நிலைத்திருப்பவரை நன்றியுடன் வணங்கி மகிழ்கிறேன்.- ம.பிரபு, சிவகங்கை.தொடர்புக்கு: 99440 83151