உள்ளூர் செய்திகள்

நேர்மை பாதை!

தேனி மாவட்டம், உப்புக்கோட்டை பச்சையப்பா மாதிரி பள்ளியில், 2015ல், 1ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்... சூழலியல் பாட ஆசிரியை ரஞ்சனி, அன்று தேர்வு நடத்தப்போவதாக கூறியிருந்தார். கோடை வெயில் கொளுத்தியதால் கடும் சோர்வில் பாடங்களை படிக்க இயலவில்லை. பயத்தால் மறுநாள் வகுப்பறையில் தோழியிடம் இது பற்றி கூறினேன். அவளும் முன் தயாரிப்புடன் வந்திருக்கவில்லை. எனவே, பாடப்புத்தகத்தில் இருந்து பக்கத்தை கிழித்து சட்டை பையில் வைத்திருந்தோம். அது தவறு என்று அப்போது தெரியவில்லை.இதை கண்டு விசாரித்த ஆசிரியையிடம், 'தேர்வை எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. கண்டிப்பாக முடிக்க வேண்டுமே என்ற எண்ணத்தால் இவ்வாறு செய்தோம்...' என நடுக்கத்துடன் கூறினோம். கடும் கோபத்தில் தண்டித்தபடி, 'பாடங்களை படிக்காமல் வந்தால் உரிய காரணத்தை தெரிவிக்க வேண்டுமே தவிர, தவறான வழியை தேர்ந்தெடுக்க கூடாது...' என்று அறிவுரைத்தார். அது மனதில் பதிந்து வாழ்க்கையில் பாடமாகியது. முயற்சி செய்து படித்து தேர்வை எதிர்கொண்டேன். அதன் விளைவாக, 10ம் வகுப்பு பொதுதேர்வில், 481 மதிப்பெண்கள் பெற்று சாதித்தேன். என் வயது, 16; பள்ளியில், 11ம் வகுப்பு படித்து வருகிறேன். தவறை உணர்ந்தால் நேர்மையான பாதைக்கு அது அழைத்து சென்று வெற்றியை பரிசளிக்கும் என்பதை என் முதல் வகுப்பறை கற்றுத்தந்தது. வாழ்வில் உயர நேர்மை பாதையை தேர்ந்தெடுக்கும்படி வழிகாட்டிய ஆசிரியை ரஞ்சனிக்கு மனம் நிறைந்த நன்றியை சமர்பிக்கிறேன். - ப.ஜீவலட்சுமி, தேனி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !