உள்ளூர் செய்திகள்

நள்ளிரவு!

மக்கள் மனநிலை அறிய மாறுவேடத்தில் நகர்வலம் புறப்பட்டார் மன்னர்.அரண்மனை பின்புறம் வழியாக வெளியேறினார்.சற்று தொலைவில் அரண்மனை மதில் சுவர் மீது கயிறு வீசி கொண்டிருப்பவனைக் கண்டதும் அருகே சென்றார்.புருவம் உயர்த்தியவன், 'என்ன பெரியவரே... இந்த நேரத்தில் வந்துள்ளீர்...' என கேட்டான்.'நான் வழிப்போக்கன். பிழைப்பு தேடி வந்தேன். இருட்டி விட்டது. தங்கி செல்ல இடம் தேடுகிறேன்...' என்றார் மன்னர்.'அப்படியா... நான் பக்கத்து ஊர்க்காரன்... அரண்மனையில் விலை உயர்ந்த வைரங்கள் இருப்பதாக கேள்விப்பட்டேன். அதை எடுக்க வந்துள்ளேன். உள்ளே சென்று திரும்பும் வரை ஆள் நடமாட்டத்தை கவனித்து கொள்ளுங்கள். கிடைப்பதில் சம பங்கு தருகிறேன்...'கூறியபடி சுவர் ஏறி குதித்து அரண்மனைக்குள் புகுந்தான்.மன்னருக்கு, அதிர்ச்சியும், வியப்புமாக இருந்தது. 'என்ன தான் நடக்கிறது பார்ப்போம்' என்று காத்திருந்தார்.கஜானா அறைக்குள் நுழைந்தான் திருடன். அங்கு மூன்று வைரங்கள் இருப்பதை கண்டான். சற்று யோசித்து இரண்டு வைரங்களை எடுத்து வெளியேறியவன், 'பெரியவரே... அங்கு மூன்று வைரங்கள் இருந்தன. பிரித்து கொள்வதில் சிரமம் என்பதால் இரண்டை மட்டும் எடுத்து வந்தேன். இதோ உங்களுக்கு உரிய பங்கு...'ஒரு வைரத்தை கொடுத்தபடி இருளில் மறைந்தான்.அரண்மனை பாதுகாப்பு குறித்து கவலை அடைந்தார் மன்னர். நகர்வலத்தை ரத்து செய்து நேராக கஜானா அறைக்கு சென்றார்.அங்கு ஒரு வைரம் இருந்தது.விடிந்ததும் அமைச்சரை அழைத்து, 'நேற்று இரவு இங்கு திருடர் நடமாட்டம் இருந்தது போல் தெரிகிறது. ஆய்வு செய்யுங்கள்...' என்றார் மன்னர்.அமைச்சர் கஜானா அறைக்குள் சென்றார். அங்கிருந்த வைரத்தை கண்டார். சற்று யோசித்த பின் எடுத்து மடியில் சுருட்டி மறைத்துக் கொண்டார்.பின், 'தங்கள் கணிப்பு சரியானது தான் மன்னா. பாதுகாத்து வைத்திருந்த மூன்று வைரங்கள் திருடு போய்விட்டன...' என்றார்.மன்னருக்கு மேலும் அதிர்ச்சி. அதை வெளிக்காட்டமால், திருடனை பிடிக்க உத்தரவிட்டார்.சபை கூடியது. திருடனை பிடித்து வந்தனர். விசாரணை துவங்கியது. நடந்ததை கூறி தன்னிடம் இருந்த வைரத்தை சபையில் ஒப்படைத்தான் திருடன்.'பொய் சொல்கிறான் மன்னா... இவனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்...' கர்ஜித்தார் அமைச்சர்.'அவன் உண்மையைத்தான் சொல்கிறான்...'மன்னர் குறுக்கீடு கண்டு சபையோர் விழித்தனர்.நள்ளிரவு சம்பவத்தை விவரித்து, தன்னிடம் இருந்த வைரத்தை சபையில் ஒப்படைத்தார் மன்னர்.'அப்படியானால் மூன்றாவது வைரம்...'சபையோர் கேள்வி எழுப்பினர்.'அது அமைச்சர் வசம் உள்ளது...'மன்னர் தெரிவித்தார்.பொறியில் சிக்கிய எலியானார் அமைச்சர். அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார் மன்னர். திருடிய போதும், நேர்மையாக இருந்ததால் பிடிபட்ட திருடனை விடுவித்து, கஜானா அறை பாதுகாவலனாக நியமித்தார் மன்னர்.குழந்தைகளே... சிறந்த நெறியான நேர்மையை எப்போதும் கடைபிடிக்க வேண்டும்.- மா.அசோகன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !