உள்ளூர் செய்திகள்

நிறம்!

வேடசந்துார் பள்ளியில் படித்தான் இனியன். உடல் நிறம் சற்றே கருப்பாக இருக்கும். இதை சுட்டிக்காட்டி, மனம் நோகும்படி கேலி செய்து வந்தனர் சக மாணவர்கள். கேலி, கிண்டலை அவன் பொருட்படுத்துவதில்லை. அதுபோன்ற கூட்டத்தைக் கண்டால், புன்னகையுடன் நகர்ந்து விடுவான்.அன்று பள்ளியில் திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி நடந்தது.அதில் பங்கேற்று, 1,330 திருக்குறளையும் ஒப்பித்தான் இனியன்; வள்ளுவர் உருவ ஓவியத்தையும் சிறப்பாக வரைந்திருந்தான். அதைப் பார்த்த அனைவரும் பிரமித்தனர். போட்டியில், மாநில அளவில் முதலிடம் பெற்றான். மறுநாள் பள்ளி வழிப்பாட்டு கூட்டத்தில் இனியனை பாராட்டினார் தலைமையாசிரியர். பின், தனியாக அழைத்து, ''வெற்றியை அடைவதற்கு எப்படி பயிற்சி செய்தாய்...'' என விசாரித்தார்.''ஐயா... கடந்த ஆண்டு தான் குறள் படிக்க துவங்கினேன். நிதானமாக கருத்துக்களை உள்வாங்கி மனதில் பதிய வைத்துள்ளேன். இதற்கு துாண்டுகோல் தமிழாசிரியர் தான்... சக மாணவர்கள் கேலி செய்யும் போது கண்டித்தார். ஆனாலும் என் நிறம் குறித்த கேலியை யாரும் நிறுத்தவேயில்லை; எனவே, அனைவரும் திரும்பி பார்க்கும் அளவில் சாதனை புரிய அறிவுறுத்தினார். பின்தான், குறள் பயிற்சி செய்தேன்...'' மனம் நெகிழ்ந்து பாராட்டினார் தலைமையாசிரியர்.வெற்றிக் கோப்பையுடன் வகுப்புக்கு வந்தான் இனியன். எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்றது வகுப்பு. நிறத்தை குறிப்பிட்டு, கீழ்மையாக கேலி பேசிய மாணவர்கள் மன்னிப்பு கோரினர்.''நிறம் என்பது வெளிப்புற தோற்றம். அது, மனிதனுக்கு மனிதன் மாறுபடும்; மனம் தான் துாய்மையாக இருக்க வேண்டும். இனி, நிறபேதம் செய்யாதீர்...'' தமிழாசிரியர் அறிவுரைத்தது கேட்டு பெருமிதமடைந்தான் இனியன்.பட்டூஸ்... இனம், நிறத்தை முன்வைத்து பேதம் பார்ப்பது தீயச்செயல். அதுபோன்ற மனோபாவத்தை ஒழித்து, மதிப்புடன் வாழ பழகுங்கள்! - ப.காருண்யா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !