உள்ளூர் செய்திகள்

பொய் கட்டு!

இனியன், 6ம் வகுப்பு படித்து வந்தான். அப்பா ஸ்டீபனும், அம்மா ஷீபாவும் அவனை அறிவுள்ளவனாக வளர்த்து வந்தனர். பள்ளிக்கூடம் செல்லும் வழியில், ஒரு ஆலமரத்தின் நிழலில் இளைஞன் ஒருவன், இரண்டு கால்களிலும் கட்டுகளை போட்டு, கையில் கருப்பு நிற திருவோடு ஏந்தி, ''அம்மா... தாயே... பிச்சை போடுங்கம்மா...'' என்று சத்தம் போடுவான். அந்த வழியே வருவோர், போவோர் அந்த திருவோட்டில் காசு போட்டனர். அதை எடுத்து, நொண்டியபடி சென்று அருகில் உள்ள உணவு விடுதியில், உணவு வாங்கி உண்டு, இரவு வேளையில் அந்த மரத்தடியிலேயே தங்கிக் கொள்வான். இனியன் பள்ளி செல்லும் போதெல்லாம், அந்த இளைஞனை உற்று பார்ப்பான். அவனுடைய புத்திசாலித்தனம், இளைஞனின் காலில் உள்ள கட்டு, உண்மையானது அல்ல என்றும், பொய் கட்டு என்றும் அவனுக்கு உணர்த்தியது. அறிவோடு நிதானமாக யோசிக்க துவங்கினான், இனியன். ஒ ரு நாள் - மக்கள் நிறைய கூடி இருக்கும் போது, அந்த மரத்தின் கீழே நின்ற இனியன் திடீரென, ''பாம்பு... ஐயோ பாம்பு...'' என, சத்தம் போட்டான். சுற்றி நின்றவர்கள் பயந்து ஓட, கால் கட்டோடு அமர்ந்திருந்த இளைஞனும், கையில் இருந்த திருவோட்டை அம்போ என விட்டு விட்டு, பயத்தில் எழுந்து ஓடினான். பின்தான் கூடியிருந்தவர்களுக்கு உண்மை தெரிந்தது. உழைக்கும் வயதில் உழைக்காமல், சோம்பேறியாக பிறரிடம் கையேந்தும், அந்த பொய் கால்கட்டு இளைஞனுக்கு புத்தி புகட்ட, இனியன் கையாண்ட யுக்தி என்று. கூடியிருந்தவர்கள் இனியனின் புத்திசாலித்தனத்தை பாராட்டி, அந்த சோம்பேறி இளைஞனை அலட்சியப்படுத்தி, அங்கிருந்து அகன்றனர். பொய் கட்டு போட்டு ஊனம் என ஊரை ஏமாற்றி பிழைத்தது, அனைவருக்கும் தெரிந்து விட்டதே என, வெட்கப்பட்டான் அந்த சோம்பேறி இளைஞன். அப்போது, அவனை அழைத்த உணவு விடுதி உரிமையாளர், மனம் திருந்தி வேலை செய்து பிழைக்க அறிவுரை கூறினார். அந்த அழைப்பை ஏற்று, அவரிடமே வேலைக்கு சேர்ந்தான் அந்த இளைஞன். இப்போது, அந்த இளைஞன் கை ஏந்துவதை நிறுத்தி, உணவு விடுதியில் சர்வராக வேலை செய்கிறான். சோம்பேறி இளைஞனிடம் மனம் மாற்றம் ஏற்படுத்த, உண்மைக்கு எதிராக, பாம்பு என்று பொய் கூறியதற்காக, தன் பெற்றோரிடம் மன்னிப்புக் கேட்டான், இனியன். நல்ல விஷயத்திற்காக பொய் சொல்வதில் தவறில்லை என, உணர்ந்து கொண்டனர், இனியனின் பெற்றோர். சோம்பேறி இளைஞனை திருத்தியதற்காக அவனை பாராட்டினர். பட்டூஸ்... படிக்கும் பருவத்திலேயே புத்திசாலித்தனத்தோடு யோசித்தால், நல்ல செயலை செய்து அனைவரின் பாராட்டுகளையும் பெறலாம். - எஸ்.டேனியல் ஜூலியட்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !