வாக்குறுதி!
மதுரை மாவட்டம், மேலுார் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1953ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்தேன். ஓவிய ஆசிரியராக இருந்த தேவசுந்தரபாண்டியன், வரையும் நுணுக்கங்களை வசீகரிக்கும் வகையில் கற்று தந்தார். எனது ஆர்வத்தை கவனித்து, மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான ஓவியப் போட்டியில் பங்கேற்க, என் பெயரை பதிவு செய்திருந்தார். முந்தைய நாள் திடீரென உடல்நல பாதிப்பால், பங்கேற்க இயலவில்லை. இதனால், நான் கவலை அடைந்திருந்ததை என் முகத்தை பார்த்தே தெரிந்து கொண்டார். 'பல போட்டிகளில் பங்கேற்று, பெயரும் புகழும் பெறுவாய்' என, தேற்றினார். 'நீ கற்றுக்கொண்ட கலை, மற்றவர்களுக்கும் போய் சேர வேண்டும்' என்று அறிவுரை கூறினார். குடும்ப வறுமையால் தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவிய பயிற்சி கைகொடுத்ததில், திருப்பூர் சர்வோதய சங்கத்தில் ஓவியராக பணியில் சேர்ந்தேன். என் வயது 88. பணிக்காலத்தில் மகான்கள், தெய்வத்திரு உருவங்களை திரைச்சீலையில் அச்சிடுவதை, முதல் முதலாக அறிமுகப்படுத்தினேன். எம்.ஜி.ஆர்., நடித்த பல்லாண்டு வாழ்க திரைப்படத்தில், நான் வரைந்த திருவள்ளுவர், புத்தர் ஓவியங்கள் இடம் பெற்ற திரைச்சீலை பயன்படுத்தப்பட்டது. 'தினமலர் வாரமலர்' உள்ளிட்ட இதழ்களில், கதைகளுக்கு ஓவியங்கள் வரைந்துள்ளேன். அவ்வப்போது ஓவியம் கற்றுக்கொடுக்கும் வகுப்புகளை ஞாயிற்றுக்கிழமைகளில் இலவசமாக நடத்தி, ஓவிய ஆசிரியருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறேன். சிறந்த ஓவியருக்கான, 'கலை முதுமணி' பட்டத்தை வழங்கி, தமிழக அரசு கவுரவித்துள்ளது. இந்த உயர்வுகளுக்கு அடிப்படையாக அமைந்த, ஆசிரியர் தேவசுந்தரபாண்டியனை வணங்கி போற்றுகிறேன். - ம.மருதபாண்டியன், திருப்பூர். தொடர்புக்கு: 96007 77453