இளஸ் மனஸ்! (229)
அன்புள்ள பிளாரன்ஸ் ஆன்டி...என் வயது, 17; அரசு பள்ளியில், 12ம் வகுப்பு படிக்கும் மாணவி; உடன் படிக்கும் மாணவி ஒருவர், 'வீகன்' என்ற உணவு முறையை பின்பற்றுகிறாள்; என்னையும் வீகன் என்ற உணவுப் பழக்கத்துக்கு மாறும்படி தொடர்ந்து வற்புறுத்துகிறாள்.என்னிடம், 'மிருகங்களின் மாமிசம், ரத்தம், தோலை பயன்படுத்தும் சுயநலவாதியாக இருக்காதே... மிருகாபிமானியாக இரு...' என்கிறாள் அந்த தோழி. குடும்பத்தினர் அனுமதி இல்லாமல், வீகன் என்ற உணவுப் பழக்கத்துக்கு மாற முடியுமா... இதுபோல் மாறுவது நல்லதா... கெட்டதா... தெளிவுபடுத்துங்கள் ஆன்டி...இப்படிக்கு,எம்.பர்வீன்பானு.அன்பு மகளே...உலகில், மூன்று வகையான உணவு பழக்கங்கள் உள்ளன. அவை...* ஒன்று - அசைவம். இதை உலகில், 77 சதவீதம் பேர் கடைபிடிக்கின்றனர்* இரண்டு - சைவம், 22 சதவீதம் பேர் பின்பற்றுகின்றனர்* மூன்று - நனிசைவம், 1 சதவீத பேர் கடைபிடிக்கின்றனர். இது உலகில், 8.8 கோடி பேர் என எண்ணிக்கையில் கூறப்படுகிறது. இவர்கள் பின்பற்றும் உணவுப் பழக்கத்தை, 'வீகன்' என்றும் கூறுவர். இதில், அசைவ உணவுகளைத் தவிர்த்து, தாவர உணவுகளை மட்டும் சாப்பிடுவர். ஒவ்வொருவர் விருப்பத்திற்கும் ஏற்றாற் போல அது அமையும். பிராணிகளின் தோலில் செய்யப்பட்ட பொருட்களையும், மிருகங்கள் மீது சோதிக்கப்பட்ட பொருட்களையும் புறக்கணிப்பர் நனிசைவர்.ஐரோப்பிய நாடான இங்கிலாந்தை சேர்ந்த டொனால்டு வாட்சன் தான், நனிசைவர்களின் தந்தையாக கருதப்படுகிறார். அவர் தான், நவ., 1944ல் நனிசைவம் என்ற உணவு கொள்கையை ஆரம்பித்தார்.முதல் நனிசைவர் அரபு தத்துவவாதி அல்மாரி எனக் கூறப்படுகிறது. நனிசைவர்களில், 79 சதவீதம் பேர் பெண்கள். ஹிந்து, சமணம், பவுத்தம் நனிசைவத்தோடு மிகவும் ஒத்துப் போகும் மதங்கள்.நனிசைவத்தை பின்பற்றுவோர் என்னென்ன சாப்பிடுகின்றனர் என்று பார்ப்போம்...பழங்கள், காய்கறிகள், ப்ரக்கோலி, பட்டாணி, பீன்ஸ், பருப்பு வகைகள், பிரட், அரிசி, பாஸ்தா, சிறுதானியம், சோயா பால், தேங்காய் பால், பாதாம் பருப்பு பால், சோயா தயிர், காய்கறி எண்ணெய்கள், கீரைகள் உதாரணத்துக்கு பரட்டைக்கீரை, ஆரஞ்சு பழசாறு. முதுமையடையும் காலத்தில் உடல் ஆரோக்கியம் கருதி, நனிசைவ உணவு முறையை பின்பற்றி வாழலாம். சிறுவர், சிறுமியர், நனிசைவராக இருக்க பெற்றோர் அனுமதி பெறுவது மிக முக்கியம்.மாமிசத்தை விலக்குவதால், ஒரு ஆண் அல்லது பெண்ணுக்கு புரதசத்து, கால்ஷியம், ஒமேகா - 3, கொழுப்பு அமிலங்கள், ஜிங்க், வைட்டமின் - பி12, வைட்டமின் - டி போன்ற சத்துக்கள் கிடைக்காமல் போகிறது. நனிசைவ உணவு முறையை பின்பற்ற வேண்டுமென்றால், மாமிசத்துக்கு மாற்றாக உணவு பொருட்களை ஆய்ந்து தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். சைவராக, அசைவராக, நனிசைவராக இருப்பதை விட, மனிதாபிமானம் மிக்கவராய் இருப்பது உறவுக்கு உவப்பானது.- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.