உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (236)

அன்புள்ள பிளாரன்ஸ் அம்மா...என் வயது, 18; இளங்கலை வெகுஜன தகவல் தொடர்பு, 2ம் ஆண்டு படிக்கும் மாணவன். எனக்கு பெரும்பாலும், கூரியர் மூலமே தபால்கள் வருகின்றன. நம் தபால் துறையில் விற்கும் போஸ்ட் கார்டு, இன்லன்ட் லெட்டர் போன்றவற்றை யாரும் உபயோகித்து பார்த்ததில்லை.தந்தி சேவையும் நம் நாட்டில் நிறுத்தப்பட்டு விட்டது; பேசாமல், இந்தியாவிலுள்ள அனைத்து தபால் அலுவலகங்களையும், இழுத்து மூடி விட்டால் என்ன... உங்கள் அபிப்ராயத்தை அறிய ஆர்வமாக உள்ளேன். தெளிவாக சொல்லுங்கள் அம்மா.இப்படிக்கு,அருண் மனோகரன்.அன்பு மகனே...மத்திய அரசு நடத்தும் தபால் துறையையும், தனியார் நிறுவனங்கள் நடத்தும் கூரியர் எனப்படும் துாதஞ்சல் அமைப்பையும் முதலில் ஒப்பிட்டு பார்ப்போம்...இந்திய தபால் துறை, அக்., 1, 1854ல் துவங்கப்பட்டது. டில்லி, சன்சத் வீதியில் தான், இதன் தலைமையகம் உள்ளது. இந்தியாவில், 1.54 லட்சம் தபால் அலுவலங்கள் உள்ளன; 5 லட்சம் ஊழியர்கள் இவற்றில் பணிபுரிகின்றனர். தந்தி சேவை, ஜூலை 13, 2013 இரவு, 9:00 மணிக்கு நிறுத்தப்பட்டது. இந்தியாவின் கடைசி தந்தி, ஜூலை 14, 2013 அன்று மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் இருந்து கவிதா வாக்கமேர் என்பவரால் அனுப்பப்பட்டது. அவரது தாய் அதை பெற்றார்.தற்போது இயங்கி வரும் தபால் அலுவலகங்களின் பணிகள்:* அஞ்சல் தலை, அஞ்சல் அட்டை கடித உறை விற்பனை * பதிவு தபால் அனுப்புதல் * பணம் அனுப்புதல் * பொருட்கள் அனுப்புதல் * உள்நாட்டு, வெளிநாட்டு அஞ்சல்* விரைவு அஞ்சல் வழியாக, 35 கிலோ எடை வரை பொருட்கள் அனுப்புதல் * வீட்டு உபயோகப் பொருட்கள் அனுப்புதல் * மின்னணு அஞ்சல் இணைய வழியில் தொகை செலுத்துதல் * புத்தகங்கள் விற்பனை * சிறு சேமிப்பு மற்றும் ஆயுள் காப்பீடு * விமானம், ரயில் பயண சீட்டுகளை முன்பதிவு செய்தல்.இந்தியாவில், தனியார் நடத்தும், 120க்கும் மேற்பட்ட துாதஞ்சல் நிறுவனங்கள் உள்ளன. டி.டி.டி.சி., ப்ளூடார்ட், பெடக்ஸ், டி.ஹெச்.எல்., சேப் எக்ஸ்பிரஸ், புரபசனல் கூரியர்ஸ், எஸ்.டி., கூரியர்ஸ் அவற்றில் சில...தபால் சேவையில் கீழ்க்கண்டவை முக்கிய அங்கம் வகிக்கின்றன.* சமரசமில்லாத சேவை * குறித்த நேரத்தில் தபால் சேர்தல்* பாதுகாப்பும், காப்பீடும் * பார்சலை கொண்டு சேர்க்கும் மனித மற்றும் இயந்திர வசதிகள் * தபாலை கொண்டு சேர்த்ததற்கான ஆதாரம் * தபால் கொடுக்கப்படாமல் தவறி ரிட்டர்ன் ஆகுதல் * சேவை பற்றிய பார்வை மற்றும் பதிவுகள் செய்வது.துாதஞ்சலில், கிராமத்து தபால்கள் நேரடியாக கொண்டு போய் சேர்க்கப்படுவதில்லை. தபாலை நேரில் கொடுக்காமல் போனில் அழைத்து, அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள சொல்வர். துாதஞ்சலில் ஈடுபட்டுள்ளோர், பெரும்பாலும், தபால் துறையில் பணி செய்து, ஓய்வு அல்லது விருப்ப ஓய்வு பெற்றவர்களே...தபால் துறையில், 'ஸ்பீட் போஸ்ட்' என்ற விரைவு தபால் நடைமுறையில், பார்சல்கள் மிக சிறப்பாக டெலிவரி செய்யப்படுகிறது. தனியார் துாதஞ்சல் வந்த பின், தபால் துறை ஊழியர்கள் போட்டி போட்டு சேவையின் தரத்தை உயர்த்தியுள்ளனர். பாரம்பரியமிக்க தபால் துறை இந்தியரின் இடுப்பு வேட்டியாக உள்ளது. கூரியர்கள் வெறும் மேற்துண்டாக மட்டுமே உள்ளது.- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !