உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (249)

அன்புள்ள அம்மா...நான் ஒரு இல்லத்தரசி. எனக்கு, 27 வயதாகிறது. இரண்டு வயதில் மகன் இருக்கிறான். பாலுாட்டும் சமயங்களில், என்னை கடித்திருக்கிறான். அதை பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. ஆனால், தந்தையை, துாக்கி கொண்டாடும் உறவினர் பெண்களை, அண்டை அயலாரை, பக்கத்து வீட்டு குழந்தைகளை, நறுக்கென்று கடித்து விடுகிறான்.இப்படி கடித்து விட்டு, ஒரு சிரிப்பு சிரிப்பான் பாருங்கள். எனக்கு, டன் கணக்கில் எரிச்சல் ஏற்படும். இப்படி குறும்பு செய்யும் குழந்தையை எப்படி திருத்துவது... தயவுசெய்து நல்ல வழி சொல்லுங்கள். இப்படிக்கு, தனுஜா ராஜாராமன்.அன்புள்ள அம்மா...குழந்தை, தன் செயல்களை உணர்வுகளால், வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத போது கடிக்கும். குழந்தை எல்லா செயல்களையும், பல் மூலம் முயற்சி செய்ய விரும்புகிறது.குழந்தைகள் பல்லால் கடிப்பதற்கான காரணங்கள் இதோ-...* ஈறுகளில் நமைச்சல்* பசி அல்லது துாக்க உணர்வு இருக்கும் போது சலிப்பு* குறிப்பிட்ட சூழலில் தற்காத்துக் கொள்தல் * பிறர் கவனத்தை ஈர்த்தல்* வாழும் இடத்தை மாற்றுதல்* புதிய குழந்தையை காணும் போது ஏற்படும் உணர்வு* மழலை பள்ளி செல்ல ஆரம்பித்தல்* பல் துலக்குவதால் ஏற்படும் வலியை குறைக்க* ஏமாற்ற உணர்வுகளை வெளிப்படுத்த என பல காரணங்களால் குழந்தை கடிக்கும்.சில குடும்பங்களில் உள்ள முதியோர், குழந்தைகளுக்கு கடிக்க சொல்லிக் கொடுத்து ரசிப்பர். அது பழக்கமாகி விடும். குழந்தை கடிப்பதை தடுக்கும் வழிகள் இதோ-...* கடிப்பது தவறு என புரிய வைக்க வேண்டும்; தண்டிக்க கூடாது* விளையாட்டு தோழரை கடித்தால், குழந்தையை விலக்கி விடுங்கள்* குழந்தைகளுடன் பெற்றோர் நேரத்தை செலவிட வேண்டும்* உணவு அட்டவணையை மாற்றவும்* குழந்தை போதுமான அளவு துாங்குகிறதா என கவனிக்கவும்* ஆப்பிள் துண்டுகளை நொறுக்கு தீனியாக கொடுக்கவும். குழந்தை பொருள் விற்பனையகத்தில், 'சிலிகான் டீத்தர்' வளையம் அல்லது பொம்மை வடிவில் விற்பர்; அது கிருமி நீக்கம் செய்யப்பட்டது. டீத்தர்களை கடிக்கக் கொடுக்கலாம். குழந்தை கடித்த பகுதியை உப்பு நீரால் அலசி, சோப்பால் கழுவ வேண்டும்.தினமும் ஒரு மணி நேரம் வெளியே நடை பயிற்சிக்கு அழைத்து செல்லவும். உளவியல் ரீதியாக ஆறுதல் பெறும் குழந்தை கடிக்காது. தொடர்ந்து கடித்தால், நரம்பியல் நிபுணரிடமோ, குழந்தைகள் நல மருத்துவரிடமோ தேவையான மருத்துவ ஆலோசனை பெறுங்கள். கடிக்கும் பாப்பாவுக்கு அன்பு முத்தங்கள்!- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !