உள்ளூர் செய்திகள்

புதுமையால் வெற்றி!

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, கமிட்டி நடுநிலைப் பள்ளியில், 2011ல், 8ம் வகுப்பு படித்த போது, அறிவியல் ஆசிரியராக இருந்தார் ஞா.அ.டென்சிங். கற்பித்தலில் புதுமையை புகுத்தி சாதனைகள் புரிந்தார். வகுப்பில், மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்வதிலும், முன் உதாரணமாக திகழ்ந்தார். தமிழ் வழியில் பயின்ற எங்களுக்கு, அறிவியல் மற்றும் கணித பாடத்தை, தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் நடத்துவார். அப்போது கற்பித்த ஆங்கில சொற்கள், மேற்படிப்பின் போது மிகவும் உதவியது. ஆங்கில மொழியில் சொற்பொருட்கள் அறியும் ஆர்வத்தை வளர்த்தது. கல்லுாரியில் சேர்ந்த போது ஆங்கில மொழி புலமையை சிரமமின்றி எதிர்கொள்ள உதவியது. புரிந்து படிப்பதற்கு வழி வகுத்தது. தமிழ் வழியில் பயின்றிருந்த சக மாணவர்களுக்கும் உதவ வழிகோலியது.எனக்கு, 26 வயதாகிறது. தபால் துறையில் பணியாற்றி வருகிறேன். அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அந்த ஆசிரியர் பணி ஓய்வு பெற்று விட்டார். அவருக்கு இதயம் கனிந்த பரிசாக இந்த அன்பு கடிதத்தை சமர்ப்பிக்கிறேன். ஆங்கில பயிற்று மொழி வழியில் படித்தால் மட்டுமே, சிறந்த கல்வியை பெற முடியும் என்ற தவறான கண்ணோட்டத்தை தகர்த்து, சாதிக்க உதவியவரை வணங்குகிறேன். - பா.கமலஸ்ரீ, திருநெல்வேலி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !