இவ்வளவு அன்பா!
அவ்வையார் மிகச் சிறந்த புலவர். தமிழன்னை என்பது உலகோர் அறிந்த உண்மை. அவ்வையாரின் பாடல்கள் தமிழ்நாடு எங்கும் பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்கத் தொடங்கியிருந்த வேளை அது. அவர் சென்ற இடம் எல்லாம் அவருக்குச் சிறப்பான வரவேற்புத் தரப்பட்டது.அவ்வையார் மிகவும் எளிமையானவர்; கேப்பைக் கூழுக்குப் பாடுவார். கடைந்த கீரைக்கும் பாடுவார். 'கூழுக்குப் பாடி' என்று அவரைச் சிறப்பித்துச் சொல்வார்கள். அவ்வையாரிடம் பேராசை இல்லை. பொன், பொருளை அவர் மதித்தது இல்லை.ஆகவே, சேர, சோழ, பாண்டியர் மற்றும் குறுநில மன்னர்களும் அவரை மதித்தனர். அவர் புலமையின் முன்தலை வணங்கினர். அவர் வருவதைப் பெரும் பேறாகக் கருதினர். அப்போது தகடூர் என்னும் நாட்டைச் சிற்றரசன் ஒருவன் ஆண்டு வந்தார். அவர் பெயர் அதியமான். ஒருநாள் அவரைச் சந்திக்கச் சென்றார் அவ்வையார். அவர் அவரை ஓர் உயர்ந்த ஆசனத்தில் அமர்த்தி வைத்து, ஒரு நெல்லிக் கனியைத் தந்து உண்ணுமாறு கேட்டுக் கொண்டார்.''இந்த நெல்லிக்கனி அபூர்வமான சக்தியுடையது; எந்நாளும் வலிமையைத் தரும் வல்லமையை உடையது. நீண்ட ஆயுளை வளர்க்க வல்லது!'' என்று கூறி, அவரிடம் தந்தார் அதியமான்.அவர் அன்பின் தன்மை கண்டு நெஞ்சம் கசிந்து போனார் அவ்வையார்.''நீயோ அரசன். இதை நீ உண்டு, நாட்டு மக்களுக்கு நீண்ட நாள் சேவை செய்வதை விட்டு, என்னை உண்ணும்படி சொல்கிறாயே... நீ எத்தனை உயர்ந்தவன்?'' என்று மனமாரப் பாராட்டினார் அவ்வையார்.''நீங்கள் தமிழுக்குச் செய்யும் தொண்டால் நான் உள்ளம் உருகினேன். இதைத் தாங்கள் உண்டால் நெடுங்காலம் வாழ்ந்திருக்கலாமே... என்ற எண்ணத்திலே தந்தேன்!'' என்று மனமுருகினார் அதியமான்.அதன்பின் அவர் அவரிடம் விடைபெற்று பறம்பு மலைக்குச் சென்றார். பறம்பு மலையைப் பாரி என்பவன் ஆண்டு வந்தான். அவனும் சிற்றரசன் தான்! ஆனால், அதிய மானைப் போல வள்ளல் தன்மை நிரம்பியவன். அரசனைத் தரிசித்தவுடன் அவ்வையார் பொதுவாக, அந்த நாட்டை விட்டுக் கிளம்பிச் சென்று விடுவார்.அதன்படி அவ்வையார் பாரியைப் பார்த்தவுடன் கிளம்ப எத்தனித்தார். பாரிக்கோ அவ்வையார் மேலும் சில நாட்கள் தன்னிடம் தங்க வேண்டும் என்று விருப்பம். எனவே, அவரைத் தன்னிடம் தங்க வைக்கத் தந்திரம் ஒன்றை அவன் செய்தார்.அவர் கிளம்பும் போது ஏகப்பட்ட பொருட்களைப் பரிசளித்தான். பின் சிவிகை ஒன்றில் அவரை ஏற்றி அனுப்பி வைத்தான். நாட்டின் எல்லைப் புறத்தை அடைந்தவுடன் திடீரென வழிப்பறிக் கொள்ளைக்காரன் ஒருவன் வந்து அவ்வையாரிடமிருந்த பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றான்.வேறு வழியில்லாத அவ்வை திரும்பி வந்து பாரியிடம் புகார் செய்தார். பாரி இதைக் கேட்டு ஆறுதல் கூறினான்.''நடந்ததை எண்ணி வருந்த வேண்டாம். அந்தத் திருடனைப் பிடிக்க ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் சில காலம் தங்கி ஓய்வு எடுங்கள். போகும் போது அதைவிட அதிகமாகவே தருகிறேன்!'' என்றார்.அவ்வையாரும் அவர் விருப்பத்துக்கு இணங்கினார். இவ்வாறு மூன்று தடவை கிளம்பினார் அவ்வையார். மூன்று தடவையும் பழைய வழிப்பறிக் கொள்ளைக்காரனே வந்து பொருளைக் கவர்ந்து சென்றான்.அவ்வையார் வருந்தினார்.''வழிப்பறிக் கொள்ளையை அடக்கக் கூடாதா?'' என்று முறையிட்டார். பாரி அவரிடம் பணிவுடன் கூறினான்.''அடக்கலாம் என்று தான் நினைத்தேன். பின் விட்டு விட்டேன். அவன் வழிப்பறி செய்ததால் தானே தாங்கள் வந்து இவ்வளவு காலம் தங்கி இருக்கிறீர்கள்! அவனுக்கு ஏதாவது தண்டனை தரத் தாங்கள் தீர்மானித்தால், எனக்குத் தான் நீங்கள் அந்தத் தண்டனையைத் தர வேண்டும். ஏனென்றால் வழிப்பறிக் கொள்ளைக்காரனாக வந்தவன் நான் தான்! உங்களைத் தங்க வைக்கத்தான் நான் அப்படிச் செய்தேன்!'' என்றார்.அவ்வையார் வியந்து போனார்.''இந்த ஏழைக் கிழவி மேல் இவ்வளவு அன்பா?'' என்று மெய்யுருகிப் போனார்.***