உணர்வில் கலந்த தமிழ்!
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார், அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில், 1974ல், 8ம் வகுப்பு படித்த போது, தமிழாசிரியை சுசீலா, மிகவும் கண்டிப்பானவர். அபார திறமையுடன் பாடம் நடத்துவார். அமைதியாக, ஆர்வமாக கவனிப்போம்.நான் எழுதிய கட்டுரையில், எழுத்து பிழைகள் அதிகம் இருந்தன. அவற்றை சிவப்பு மையால் திருத்தி, எதிர் பக்கத்தில் முழு வாக்கியத்தையும் எழுதச் சொன்னார்.அவர் திருத்தியதை, ரப்பரால் அழித்து, அதன் மீது, நீல மையால் எழுதி கொடுத்தேன்.மறு நாள், நோட்டை பார்த்தவர், 'பளார்...' என்று அறைந்து, 'வகுப்புக்கு, ஒரு வாரம் வரக்கூடாது...' என்று தண்டனை கொடுத்தார்.பின், தவறை உணர்த்தி, எழுத்துக்களை இடம் விட்டு முறையாக எழுத கற்றுக் கொடுத்தார். தினமும், ஒரு பத்தி எழுதி பயிற்சி பெற்றேன். பிழையின்றி தெளிவாக, அழகாக எழுத கற்றேன்.என் வயது, 61; திறமை மிக்க அந்த ஆசிரியையின் முகம், மனதில் தங்கியுள்ளது. அவர் கற்றுத்தந்த தமிழ், உணர்வுடன் கலந்துள்ளது.- கனகமணி, திண்டுக்கல்.