திக்... திக்... பங்களா... (19)
சென்றவாரம்: விடுமுறையில், குற்றால மாளிகைக்கு வந்த வினுவும், மதுவும் மர்மங்களை துப்பறிய, மந்திரவாதி ஜெய்சீலிமா குடிலுக்கு சென்றனர். அறையை ஆராய்ந்த போது, கழுத்தை நெருக்கியது இரும்பு கரம். இனி -பிடிஇறுகியதால் தப்ப முடியாமல் திணறினர். ஒரு நொடி தான். பிடியை தளர்த்தியது அந்த கரம். தொப்பென்று தரையில் விழுந்தனர். கழுத்தை நெருக்கிய கரத்தை அறிய பீதியுடன் திரும்பினான் வினு.ஜெயசீலிமா நின்றிருந்தாள். மாமிச மலை உடம்பு கிசுபுசுத்தது. பற்களை நரநரவென்று கடித்தாள். கையில் மந்திரக்கோல்; பையில் ஆபூர்வ மூலிகைகள்.'திருட வந்தீங்களா... ஆள் இல்லாத குடிலுக்குள் என்ன வேலை... என் ரகசியங்களை எல்லாம் தெரிந்து விட்டீர்களா...''நிறுத்து... நீ நல்லவள் இல்லை! உன் குட்டு வெளிப்பட்டு விட்டது. நீ யார், இங்கு என்னென்ன செய்து கொண்டிருக்கிறாய் என்பது எல்லாம் தெரிந்து விட்டது. நீ பேய்களின் தலைவி! பழையக் குற்றாலத்தை சுடுகாடாக்க முயன்று வருகிறாய்!' என்றான் வினு.முகம் சிவந்தாள் ஜெய்சீலிமா.'என் சுயரூபம் தெரிந்தவர்களை உயிருடன் விடுவதில்லை!'மந்திரக் கோலை ஆட்டினாள்; அவ்வளவு தான்... மது, வினுவால் கை கால்களை அசைக்க முடியவில்லை; கற்சிலை போல் உறைந்தனர்.'வேறு என்ன தெரிந்து கொண்டீர்கள்...''எங்களுடைய உருவப் பொம்மையை வைத்திருக்கிறாய்; மலை மாளிகையில் வசிக்கும் மனிதர்களை, மிக மோசமானவர்களாக, உன் மந்திர சக்தி மூலம் காட்டுகிறாய்!''மிகச் சரி... பின்னே...''உனக்கு பழைய குற்றாலத்தில் இரண்டு பிரதான எதிரிகள். ஒன்று எங்க தாத்தா, பாட்டி; மற்றொன்று கொளஞ்சி. அவரை ஏதோ பண்ணி விட்டாய். அடுத்து எங்க தாத்தா, பாட்டியையும் கொல்ல போகிறாய்!''கொளஞ்சிக்கு ஏதோ ஆகி விட்டது என்பது உங்களுக்கு எப்படி தெரியும்!''துாசிப் புயல் தகவல் தந்தது!'ஜெய்சீலிமாவின் முகம் அஷ்ட கோணலானது.மந்திரக் கோலை ஆட்டினாள்.மது, வினு கைகளை அசைக்க முடிந்தது.அவள் முகம் மாறியது; தாய்மை நிறைந்து பொலிந்தது.'பயப்படாதீங்க!'தயங்கியபடியே அமர்ந்தனர். தேனும், பழங்களும் கொடுத்து உபசரித்தாள். ஆச்சரியத்தால் முழித்து சுற்றும் முற்றும் பார்த்தனர்.'பழைய குற்றாலம் என்னை கொடியவளாக கருதுகிறது; நான் நல்லவள்...''நல்லவள் என்றால் ஏன் மலைமேல் வசிக்கிறாய்...''என் உடல் மிகவும் குண்டு. என்னை பெண் பார்க்க வந்த எல்லாரும் அதிகமாக நகை கேட்டு விலை பேசினர்; அப்பாவுக்கு கொடுக்க வசதியில்லை; எனக்கு திருமணமாகாத கவலையில் இறந்து போனார். பணவெறி பிடித்த சமுகத்தின் மீது கோபம் வந்தது; ரச வாதம் மூலம் தங்கத்தை உருவாக்கி, ஏழைப் பெண்களின் திருமணத்தை நடத்த விரும்பினேன்; அதனால், மந்திரம் கற்றேன். ஊர் மக்களுடன் ஒத்துப் போகாததால், மலைமேல் வந்து விட்டேன்...''அப்புறம்?''அப்போது தான் எனக்கும், மலை மாளிகை வாசிகளுக்கும், மோதல் துவங்கியது!''எங்க தாத்தா, பாட்டியுடனா...''ஆமாம்!''அவங்க உன் மீது குற்றபத்திரிகை வாசிக்கின்றனர்...'வெறுமையாக சிரித்தாள் ஜெய்சீலிமா.'என்னால் உண்மைகளை சொல்ல முடியாது என்பதால், பொய்களை கட்டவிழ்த்து விடுகின்றனர்!''ஏன் சொல்ல முடியாது?''மாந்திரீகம் கற்றவர், ஆவி உலகத்திற்கு கட்டுப்பட வேண்டும்; மலைமாளிகை சம்பந்தமான உண்மைகளை கூற கூடாது என்ற கட்டளையை காப்பாற்ற வேண்டும்!''மீறி, உண்மையை கூறினால்...'ஜெய்சீலிமாவின் முகம் இறுகியது.'தலை சுக்குநுாறாய் வெடித்து இறப்பேன்; இது தான் நடக்கும்; இப்போ ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்; உண்மைகளை கூற போறேன்; அத்துடன், தீய சக்திகளை அழிக்கும் உபாயமும் சொல்லித்தர போறேன். அவநம்பிக்கை அடையாதீங்க; மலை மாளிகையில் இருக்கும் பிரகிருதிகள், உங்க நிஜ கொள்ளு தாத்தா, பாட்டி அல்ல!''என்ன புது கதை விடுகிறாய்... உளறாதே...''உங்க நிஜ கொள்ளு தாத்தா, பாட்டி, முதுமையால் பல ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டனர். இறந்தபோது தாத்தாவின் வயது, 108; பாட்டியின் வயது, 105... நுாற்றாண்டு வாழ்ந்த தம்பதியின் உடலில் ஆவிகள் புகுந்துள்ளன. எற்கனவே, ஆவிகளுக்கு அடிமையாக இருக்கும் சுப்பையன் இதற்கு உதவுகிறான்; செண்பாவும் பேய் தான்...''செண்பா சமைத்து போடுவது...''நுாற்றுக்கணக்கான ஆவிகளுக்கு தான்!''அந்த சாப்பாட்டையா இத்தனை நாள் நாங்க தின்றோம்!''ஆவிகளில் ஆயிரக் கணக்கான வகைகள் உண்டு...''ஓ...!''மிக முக்கியமான விஷயத்தை சொல்றேன்; இரட்டை குழந்தைகளை பிடித்து பூஜை நடத்தி, புகுந்து கொண்டால், பூமியை ஆவி ஆட்சிக்குள் கொண்டு வந்து விடலாம் என, டூபிளிகேட் தாத்தா, பாட்டி கணக்கு போட்டுத்தான், உங்களை அழைத்து வைத்துள்ளனர்...'அமாவாசையன்று நள்ளிரவில் ஆவிகளை உங்கள் உடலில் விதைப்பர்; அதற்கான, அத்தனை ஆயத்த பணிகளும் நடந்தேறி விட்டன; இனி நீங்க தப்ப முடியாது!'அழும் நிலைக்கு வந்துவிட்டாள் மது; திடமாய் இருந்தான் வினு.'நீ தான், இந்த கொட்டத்தை அடக்க வழி சொல்லணும்!'யோசித்தாள் ஜெய்சீலிமா. சில நொடிகளில் அவர் முகம் பிரகாசித்தது.'ஜின் என்ற நல்ல ஆவிகளை வரவழைக்கும் ஒரு வகை மொழியை எழுதி தருகிறேன்...''சரி!''மனதை ஒருமுகப்படுத்தி அந்த மொழியை உச்சரிக்கணும்...''ஜின் ஆவி எப்படி இருக்கும்?''வெள்ளை அங்கி அணிந்து, வெள்ளை குதிரையில் வரும்; ஜின்களுக்கு தலைவன் உண்டு!''தமிழ் சினிமாவில் ஆட வருவதுபோல் இருக்குமா...'மது குதுாகலித்தாள். மனதுக்குள் சிரித்தான் வினு.ஜெய்சீலிமாவுக்கு தலை வலித்தது; இரு கைகளால் பிடித்து கொண்டாள்.'ஏதாவது தெரிய வேண்டுமென்றால், சீக்கிரம் கேளுங்கள்!''உன் மந்திரக்கோல் எங்களுக்கு பயன்படுமா?''படாது!''நீ ரகசியங்களை கூறியது, இந்நேரம் தாத்தா, பாட்டிக்கு தெரிந்திருக்குமா...''தெரிந்திருக்காது; அதற்கு கொடுக்கும் விலை தான் என் உயிர்!'ஜெய்சீலிமாவின் தலையில் கீறல் விழ ஆரம்பித்தது.'வேற ஏதாவது சொல்ல விரும்புகிறாயா...''ஆம்''சொல்!''கடவுள் விருப்பப்படி, நேர்மையாக மட்டும்தான் வாழ வேண்டும்; உங்க முயற்சி முழு வெற்றி பெற பிரார்த்திக்கிறேன்!'ஜெய்சீலிமாவின் தலை, கனிந்த பூசணிப்பழம் போல் வெடித்து சிதறியது.மனதில் திடத்தை ஏற்படுத்திக் கொண்டு, மலைச்சரிவில் ஓட ஆரம்பித்தனர் வினுவும், மதுவும். - தொடரும்...