வீரமங்கை (1)
வீரமங்கை வேலுநாச்சியார் கி.பி. 1730ம் ஆண்டு, ராமநாதபுரம் அரசர் செல்லமுத்து சேதுபதிக்கும், முத்தாத்தாள் நாச்சியாருக்கும் ஒரே மகளாகப் பிறந்தாள். அரச குடும்பத்துப் பெண்ணாதலால் குதிரையேற்றம், வில்வித்தை, வாள் வித்தையோடு கல்வியிலும் தேர்ச்சி பெற்றிருந்தாள். பண்டையத் தமிழரின் வீர விளையாட்டான சிலம்பத்தை சிறப்பாகக் கற்றாள். நாட்டின் வீர இளைஞர்களோடு, தன் பெண் சிலம்பாட்டத்தில் போட்டியிட வேண்டும் என்று எண்ணிய தந்தை, போட்டிக்கு ஏற்பாடு செய்தார்.பாயும் புலி போல் அரங்கில் நுழைந்த அந்தச் சிறுமி, மிகத் துணிச்சலோடு சிலம்பத்தை எடுத்து விளையாடினாள். அவளை எதிர்த்து போட்டியிட முடியாமல் இளைஞர்கள் எல்லாரும் பின்வாங்கினர். கடைசியில், அவளுக்கு சிலம்பம் கற்றுக்கொடுத்த குருவையும் தோற்கடித்து வெற்றி பெற்றாள். அரசர் தன் மகளின் வீரத்தைக் கண்டு பெரிதும் பாராட்டினார். குதிரை சவாரி செய்வது வேலுநாச்சியாருக்குப் பிடித்த பொழுதுபோக்கு. ஒருநாள்தந்தையிடம், ''அப்பா, நம்மிடம் இருக்கும் குதிரைகளுக்கு வேகம் இல்லை. ஆகவே, வீரமும், வேகமும் நிறைந்த குதிரையில் ஏறிச் செல்ல விரும்புகிறேன்,'' என்றாள். மகளுடைய ஆர்வத்தையும், தைரியத்தையும் கண்டு வியந்த தந்தை, உடல் வலிமையுள்ள பெரிய குதிரையை அவளுக்கு பரிசளித்தார்.பலசாலிகளான ஆண்களே ஏறுவதற்குத் தயங்கக்கூடிய அந்தக் குதிரையைக் கண்டு வேலுநாச்சியார் பயப்படவில்லை. அதற்கு மாறாக, அதில் தாவி ஏறி சவாரி செய்ய ஆரம்பித்தாள்.காட்டை நோக்கி வேகமாகச் சென்ற குதிரை, அவளைக் கீழே தள்ள முயற்சித்தது. ஆனால், குதிரை சவாரி செய்து பழக்கமுள்ள வேலுநாச்சியார் திறமையாக அதை ஓட்டிச் சென்றாள்.'குதிரையோடு சென்ற பெண் வரவில்லையே' என்று எல்லோரும் கவலைப்பட்டனர். பல மணி நேரத்திற்குப் பிறகு, குதிரையை அடக்கி அதன் மீது சவாரி செய்து வந்த பெண்ணைக் கண்டு, அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.வீர விளையாட்டுக்களை போல, கல்வி கற்பதிலும் வேலு நாச்சியாருக்கு மிகவும் ஆர்வம் உண்டு. தமிழ் மொழியை நன்றாக கற்றுக்கொண்டாள். பழந்தமிழ் நூல்களை விருப்பத்தோடு படித்தாள். பிரெஞ்சுமொழி உட்பட பல மொழிகளையும் கற்றுத் தேர்ந்தாள்.கி.பி.1746ல் சிவகங்கை இளவரசரான முத்து வடுக நாதரைத் திருமணம் செய்து கொண்டாள். திருமணம் முடிந்தவுடன் இருவரும் குற்றால அருவியில் குளித்து மகிழ சுற்றுலா சென்றனர். சுற்றிலும் மரங்கள் நிறைந்த காட்டு வழியே அருவியை நோக்கிச் சென்றனர்.திடீரென்று, ஒரு புலி அவர்கள் முன் தோன்றி முத்து வடுகநாதரின் கழுத்தைப் பிடித்துக் கொண்டது. ஆனால், வேலுநாச்சியார் அஞ்சவில்லை. அவள் புலி மீது பாய்ந்தாள். அதன் வாளை முறுக்கி, வாயை இறுகப் பிடித்துக் கொண்டாள். அவளது இரும்புப் பிடியிலிருந்து புலியால் தப்பிக்க முடியவில்லை. அவள் கணவரை விட்டுவிட்டது. வெறும் கைகளாலேயே புலியுடன் போரிட்டுக் கொன்றாள்.ஊர் திரும்பிய பிறகு, அரசுப் பணிகளில் கணவனுக்கு உற்ற துணையாக இருந்தாள். வேலுநாச்சியாருக்கு உரிய காலத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. தந்தையின் மறைவுக்குப் பிறகு கி.பி.1750ம் ஆண்டு முத்து வடுகநாதர் சிவகங்கைச் சீமைக்கு அரசரானார். கோட்டையை வலுப்படுத்தினார். படைபலத்தைப் பெருக்கினார். மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்தார். பல கோவில்களைக் கட்டினார்.ஆற்காடு நவாப்பின் துணையோடு, ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டில் பல குறுநில மன்னர்களையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அவர்களிடமிருந்து வரி வசூலித்தனர். தமக்கு வேண்டிய நேரத்தில் படைகளைக் கொடுத்து உதவுமாறு வற்புறுத்தினர். அவர்கள் ஊரைக் கடந்து செல்லும் தம் படையினருக்கு உணவு மற்றும் தங்கும் வசதி செய்து தருமாறு குறுநில மன்னர்களுக்கு கட்டளை இட்டனர். இவற்றிற்கு அடிபணிய மறுத்தவர்கள் மீது போர் தொடுத்தனர். அப்படி ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்தவர்களுள் முத்துவடுக நாதரும் ஒருவர். அவரைத் தாக்குவதற்கான தருணத்தை எதிர்நோக்கி ஆங்கிலேயர்கள் காத்திருந்தனர்.ஒரு படையெடுப்பின்போது சிவகங்கைப் படையை எதிர்த்துப் போரிட முடியாமல் ஆங்கிலேயர் படை பின்வாங்கியது. ஒருபக்கம் சமாதானமாகப் போகலாம் என்று அவருக்குச் செய்தி அனுப்பினர். ஆனால், மறுபக்கம் சூழ்ச்சி செய்து அவரை தோற்கடிக்கத் திட்டம் தீட்டினர்.இவற்றை அறியாத முத்துவடுகநாதர் எதிரிகள் சமாதானத்திற்குச் சம்மதித்து விட்டனர் என்று எண்ணினார். மன அமைதிக்காக இறைவனை வழிபட 1772 ஜூன் 25ம் தேதி காளையார் கோவிலுக்குச் சென்றார். ஏமாற்றுப் பேர்வழிகளான அவருடைய எதிரிகள் கோவிலில் வழிபட்டுக் கொண்டிருந்த அரசனை ஆயுதம், படை ஏதுமில்லாமல் தனித்து நின்ற நிலையில் கொன்று தீர்த்தனர். கோவிலுக்குள் நடந்த இத்தாக்குதலைக் கண்ட மக்கள் அலறியடித்தபடி அங்கிருந்து ஓடினர்.இச்செய்தியை அறிந்த வேலு நாச்சியார் துடிதுடித்துப் போனாள். தானும் கணவருடன் இறந்துவிட வேண்டும் என்றுதான் முதலில் எண்ணினாள். பிறகு, அவளுடைய பெண் குழந்தை அனாதையாகிவிடும். அரசர் இல்லாமல் நாடும் சீரழிந்து விடும் என்ற எண்ணம் அவளுக்குத் தோன்றியது. அரசியான அவள் தன் கடமைக்கு முக்கியத்துவம் கொடுத்தாள். உயிரைவிடும் எண்ணத்தைக் கைவிட்டாள். தன் கணவனைக் கொன்ற எதிரிகளை ஒடுக்கித் தங்களுக்குச் சொந்தமான அரசைத் திரும்பப் பெற வேண்டுமென்று அம்மன் சன்னதியில் உறுதிப் பூண்டாள் வேலு நாச்சியார்.நவாப்பும், ஆங்கிலேயரும் வேலு நாச்சியாரை அழிக்க முடிவு செய்து அவளைத் தேடினர். அவர்களிடமிருந்து தப்பித்து வேலு நாச்சியார் நாட்டைவிட்டு ஓடினாள். அவளுக்கு அச்சமயத்தில் மருது சகோதரர்களும், அமைச்சர் தாண்டவராயப் பிள்ளையும் உற்ற துணையாக இருந்தனர். தப்பித்து ஓடிக் கொண்டிருந்த வேலுநாச்சியாரின் உயிரைக் காப்பாற்ற, தன் உயிரையும் கொடுத்தாள் உடையாள் என்ற பெண்.நவாப்பின் மகன் சிவகங்கைச் சீமைக்கு மன்னனாக முடிசூடிக்கொண்டான். அவன் கொடுங்கோலனாக இருந்தான். கடுமையான வரிகளை விதித்தான். மக்கள் நிம்மதி இழந்தனர். வரி செலுத்த மக்கள் மறுத்தனர். சிவகங்கைச் சீமையில் குழப்பமும், கலவரமும் ஏற்பட்டது.நவாப்பையும், ஆங்கிலேயரையும் திப்புசுல்தான் எதிர்த்தார். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில், வேலுநாச்சியார் அவருடைய உதவியைப் பெற நினைத்து அவருக்குக் கடிதம் எழுதினாள்.- தொடரும்...