சேதமின்றி வருவாய்க்கு பந்தலில் சாம்பல் பூசணி
பந்தலில் சாம்பல் பூசணி சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி பி.குகன் கூறியதாவது:காய்கறி, கீரை உள்ளிட்ட பல வித காய்கறிகளை ரசாயன உரம் இன்றி விளைவித்து வருகிறேன். வீட்டிற்கு தேவையான காய்கறிகளை எடுத்துக் கொண்டு, மீத காய்கறிகளை விற்பனை செய்து விடுகிறேன்.மணல் கலந்த களிமண் பூமியில், பந்தல் மற்றும் மரங்களின் மீது சாம்பல் பூசணி கொடி படர விட்டு காய் சாகுபடி செய்து வருகிறேன். குறிப்பாக, பந்தல், மரங்களின் மீது படரும் சாம்பல் பூசணிக்காய்களில் நோய் தாக்குதல் மற்றும் பூச்சி தாக்குதல் குறைவாக இருக்கும். ஒவ்வொரு பூசணி காயும், குறைந்த எடையுடன் விளைவதால், பந்தல்மற்றும் மரத்தில் இருந்து அறுவடை செய்வதற்கு சவுகரியமாக இருக்கும்.நிலத்தில் விளையும் சாம்பல் பூசணிக்காய் அதிக எடையும், நோய் மற்றும் பூச்சி தாக்குதலில் அதிகம் சேதமும் ஆகும். பந்தல், மரங்களின் மீது படரும் சாம்பல் பூசணிக்காய் சேதம் இன்றி வருவாய்க்கு வழி வகுக்கும்.இவ்வாறு அவர்கூறினார்.தொடர்புக்கு: பி.குகன்,94444 74428.