உள்ளூர் செய்திகள்

லாபம் தரும் மூலிகை பயிர் அஸ்வகந்தா

வணிகப்பயிர்களான பருத்தி, கரும்பு, மஞ்சள், மிளகாய், புகையிலை, ஆமணக்கை போல அஸ்வகந்தா செடியும் வணிக ரீதியாக பயிரிடப்படும் மருத்துவப் பயிர். அஸ்வகந்தா செடியின் வேர்ப்பகுதி மருத்துவத்திற்கு பயன்படுவதால் விவசாயிகள் வேர்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்து லாபம் ஈட்டலாம். திண்டுக்கல் வேடசந்துாரில் உள்ள மத்திய புகையிலை ஆராய்ச்சி நிறுவனம் புதிய ரகங்களை உருவாக்குவதிலும் தொழில்நுட்ப ஆலோசனை வழங்குவதிலும் ஈடுபட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய அஸ்வகந்தா உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. அமெரிக்கா, கனடா, பெல்ஜியம், இத்தாலி, ருமேனியா, பல்கேரியா, செக் குடியரசு, தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து உலர்ந்த இலைகள், வேர், வேர் துாள், சாறு, மாத்திரை, கேப்ஸ்யூல்கள் ஏற்றுமதியாகிறது.இது குறுகிய புதர் வகை செடி. பூக்கள் சிறிதாக வெளிறிய பச்சை நிற மணி வடிவிலும் பழுத்த பழம் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் காணப்படும். வணிக சாகுபடிக்கு ஏற்றதாக வல்லப் அஸ்வகந்தா 1, அனந்த் அஸ்வகந்தா 1, ஆனந்த் விதானியா 1, ஜவஹர் அஸ்வகந்தா 20, 134, ராஜ் விஜய் அஸ்வகந்தா, போஷிதா, சேத்தக், பிரதாப், ரஷிதா, சிம்புஸ்டி ரகங்கள் இந்தியாவில் உள்ளன.இந்த பயிர் எல்லா மண் வகையிலும் வளரும் என்றாலும் கரிசல் மண், செம்மண்ணில் அதிகளவு பயிரிடப்படுகிறது. தண்ணீர் தேங்காத வடிகால் வசதியுள்ள நிலம் சாகுபடிக்கு ஏற்றது. 650 முதல் 750 மி.மீ., மழை தேவைப்படுகிறது. மண் தன்மை 6.5 முதல் 8க்குள் இருக்க வேண்டும். 600 முதல் 1200 மீட்டர் உயரம் வரை 20 முதல் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் செழித்து வளரும்.மழைக்கு முன்னும் பின்னும் நிலத்தை உழுது மண்ணை சமப்படுத்த வேண்டும். மண்ணில் இடும் உரங்கள் மட்கிய நிலையில் இருக்க வேண்டும். கடைசி உழவின் போது எக்டேருக்கு 12.5 டன் தொழு உரமிட வேண்டும். கரைகளை ஒட்டி கரைகளின் மேல் விதைக்கும் போது வேர் தடிமன் அதிகரிக்கும். எக்டேருக்கு 10 முதல் 12 கிலோ விதை தேவைப்படும். அதிக மகசூல் பெறுவதற்கு 30 க்கு 10 செ.மீ., அல்லது 30க்கு 15 செ.மீ., இடைவெளி விட வேண்டும். நாற்றாங்கால் வளர்ப்பு மற்றும் நடவு செலவை குறைக்கும் வகையில் கை விதைப்பு முறையை பயன்படுத்தலாம். விதைத்த 15 முதல் 30 நாட்களில் கை கொத்து மூலம் கையால் களை எடுக்க வேண்டும். களைக்கொல்லியை தவிர்க்க வேண்டும்.இறவை சாகுபடிஇறவை பயிர் செய்யும் விவசாயிகள் நவம்பர், டிசம்பருக்கான ராபி பருவத்தில் விதைக்கலாம். மானாவாரி சாகுபடி எனில் செப்., அக்டோபரில் பருவமழையின் போது விதைக்கலாம். 60 முதல் 90 நாட்களுக்கு மழை பெய்தால் அதன் பின் அடுத்த 80 முதல் 90 நாட்களுக்கு பனியிலேயே விளைந்து விடும். பசுந்தாள் உரம், மட்கிய தொழுஉரம், ஆட்டுஉரம், மண்புழு உரங்கள், அசிடோபேக்டர், பாஸ்போ பாக்டீரியம் உயிர் உரங்களை பயன்படுத்தி தரமான வேர்களை அறுவடை செய்யலாம்.இவை பூச்சி, நோய் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. நாற்றழுகல் நோய்க்கு எக்டேருக்கு 2 கிலோ டிரைக்கோ டெர்மா விரிடி, 2 கிலோ சூடோமோனஸ் ப்ளூரசென்ஸ் இட வேண்டும். கத்தரியை தாக்கும் சிறிய வண்டு இந்த பயிரையும் தாக்கும் என்பதால் வேப்பஇலை, வேப்பம்புண்ணாக்கு, நொச்சி இலை, எருக்க இலையை பசுவின் கோமியத்தில் 24 மணி நேரம் ஊறவைத்து அதை தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.விதைத்த 150 முதல் 170 நாட்களில் அறுவடைக்கு தயாராகும். செடிகளை பிடுங்கி ஓரிரு நாட்கள் நிலத்திலேயே உலர்த்தினால் செடியின் இலை, தண்டுகளில் உள்ள மருத்துவ குணம் கொண்ட வேதிப்பொருட்கள் வேருக்கு சென்று விடும். அதன் பின் வேர்களை நீரில் கழுவி வெட்டி எடுத்து வெயிலில் உலர்த்த வேண்டும். காய்ந்த பின் சல்லி வேர்களை தடிமனான குச்சி மூலம் அடித்து தரம் பிரிக்க வேண்டும். முதல் தரம் முதல் 4 தரங்களில் வேர்களை பிரிக்கலாம். பழங்களை தனியாக அறுவடை செய்து விதைகளை பிரித்தெடுக்க வேண்டும் எக்டேருக்கு 400 முதல் 1200 கிலோ உலர்ந்த வேர்கள், 200 முதல் 500 கிலோ விதைகள் கிடைக்கும்.வேர்களை பொடியாக்கி மதிப்பு கூட்டி விற்பனை செய்யலாம். விதைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படும்.குமரேசன், பேராசிரியர், மணிவேல், உதவி பேராசிரியர் மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலையம் வேடசந்துார், திண்டுக்கல், 94439 17398


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !