உள்ளூர் செய்திகள்

நெல்லில் உயிரியல் கட்டுப்பாட்டு முறை

சம்பா சீசனில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ள நிலையில் நாற்று நட்ட 30வது நாளில் இருந்து இலைச்சுருட்டு புழுவின் தாக்குதல் ஆரம்பித்து விடும்.நாற்று நட்ட 35 வது நாளில் இருந்து இலைச்சுருட்டு புழுவின் தாக்கத்தை குறைக்க டிரைக்கோ கிரம்மா கைலோனிஸ் முட்டை ஒட்டுண்ணியை நெற்பயிரில் கட்ட வேண்டும். இது ஒரு உயிரியல் கட்டுப்பாட்டு காரணி. பயிர்களுக்கு தீங்கு செய்யும் புழுக்களின் முட்டை மீது தங்கள் முட்டைகளை இட்டு அவற்றின் இனப்பெருக்கத்தையும் வளர்ச்சியையும் கட்டுப்படுத்தும்.பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதை குறைத்து இயற்கை முறையில் புழுக்களின் தாக்கத்தை கட்டுப்படுத்தும். ஒருமுறை ஒரு ஏக்கருக்கு ரசாயன பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க ஆட்கள் கூலியுடன் மருந்து செலவையும் சேர்த்து ரூ.2000 வரை ஆகும். மேலும் வயலில் ரசாயனம் அதிகமாக படியும். மருந்து தெளிக்கும் போது தேவையற்ற நெடியும் ஏற்படும். இவை அனைத்தையும் உயிரியல் முறையில் கட்டுப்படுத்துவதே முட்டை ஒட்டுண்ணிகளின் வேலை. ஒரு அட்டையின் விலை ரூ.40. இரண்டு அட்டை வாங்கினால் ரூ.80 தான் செலவாகும். ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு 3 முறை அட்டை வாங்கினால் ரூ.240 தான் ஆகும். ரசாயன செலவை குறைத்து கூடுதல் மகசூல் பெறவும் வழிவகுக்கும்.ஏக்கருக்கு 2 சி.சி. வீதம் முட்டை ஒட்டுண்ணி அட்டையை கட்ட வேண்டும். ஒரு சி.சி. அட்டையில் 16ஆயிரம் முட்டை ஒட்டுண்ணிகள் இருக்கும். நன்கு வெயில் அடிக்கும் போது 2 மணி நேரத்தில் முட்டையில் இருந்து குளவிகள் பொரிந்து வெளியே வந்து விடும். ஒரு குளவியானது இலைச்சுருட்டு புழுக்களின் ஐந்து முட்டைகளை அழிக்கும். அதாவது அந்த முட்டைகளின் மேல் தனது முட்டைகளை இடுவதன் மூலம் புழுக்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும். ஒரு அட்டையில் உள்ள முட்டை ஒட்டுண்ணிகள் 90ஆயிரம் வீதம் ஒரு ஏக்கருக்கு 2 அட்டை கட்டும் போது ஒரு லட்சத்து 80 ஆயிரம் இலைச்சுருட்டு புழுக்களின் முட்டைகளை அழித்து அவற்றை கட்டுப்படுத்துகிறது. இப்படி 10 நாட்கள் இடைவெளியில் 3 முறை கட்டினால் புழுக்களின் தாக்கம் குறைந்துவிடும். மேலும் நெல்லில் தண்டு துளைப்பானையும் கட்டுப்படுத்துகிறது. எப்படி கட்டுவதுவரப்பிலிருந்து ஓரடி தள்ளியுள்ள நெற்பயிர்களில் முட்டை ஒட்டுண்ணி அட்டைகளை சிறிது சிறிதாக வெட்டி ஒரு நுாலில் கட்டி மறுமுனையை நெற்பயிரில் கட்ட வேண்டும். மழையில்லாத போது காலை அல்லது மாலையில் கட்டி வைத்தால் முட்டையில் இருந்து குளவி வெளியே வரும். நெற்பயிர்களில் எங்கெங்கு இலைச்சுருட்டுப் புழுவின் முட்டைகள் உள்ளதோ அங்கே சென்று அதன் முட்டை மேல் இந்த ஒட்டுண்ணி தன் முட்டைகளை இடும். இதன் மூலம் இலைச்சுருட்டுப்புழுவின் முட்டை வளர்ச்சி தடைபடும். மற்ற பயிர்களுக்கும் காவலன்இந்த முட்டை ஒட்டுண்ணியில் இருந்து வெளிவரும் குளவியானது கரும்பின் 120வது நாளில் வரும் இடைக்கணு புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்தும். தக்காளி, வெண்டை, கத்தரி, பருத்தியில் வரும் காய்ப்புழுவை கட்டுப்படுத்தும். பருத்தியில் 40 வது நாளிலும் கத்தரி, வெண்டை, தக்காளியில் 50 சதவீத பூப்பூக்கும் தருணத்தில் முட்டை ஒட்டுண்ணியை கட்ட வேண்டும். காய்கறியில் 10 நாட்கள் இடைவெளியில் காய்கறிகளை பறித்த பின் 6 முறை கட்ட வேண்டும்.முட்டை ஒட்டுண்ணியில் இருந்து வெளிவரும் குளவியானது பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் புழுக்களின் முட்டை மேல் முட்டையிடும். தனது இரையாக முட்டைகள் இல்லாவிட்டால் எந்த செடிகளில் சேதம் விளைவிக்கும் புழுக்கள் இருக்கிறதோ அங்கு குளவிகள் பறந்து செல்லும்.தமிழகத்தில் வேளாண் துறையின் கீழ் 24 உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. வேளாண் துறையின் கீழ் மாவட்டங்களில் உள்ள வேளாண் வட்டார விரிவாக்க மையங்களை அணுகலாம்.ஜெயந்தி, வேளாண் உதவி இயக்குநர் பொறுப்பு உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், மேலுார், மதுரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !