பசுமைக்குடிலில் பளபளக்குது வெள்ளரி...
மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் சத்திர வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த விவசாயி சுந்தரமூர்த்தியின் பசுமைக்குடிலில் உள்ள கொடிகளில் வெள்ளரிகள் காய்த்து குலுங்குகின்றன.தோட்டக்கலைத்துறை மானியத்துடன் பசுமைக்குடில் அமைத்து லாபம் பார்க்கும் சுந்தரமூர்த்தி தனது அனுபவங்களை கூற ஆரம்பித்தார்.கோவாப்ரேட்டிவ் ஆடிட் துறையில் உதவி இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றேன். ஏற்கனவே நிலமிருந்தாலும் நெல், கரும்பு, வாழை, இரும்புச்சோளம், கத்தரி, தக்காளி பயிரிட்டோம். காலப்போக்கில் இதையெல்லாம் தொடர முடியவில்லை. பணி ஓய்வு பெற்ற பின் தோட்டக்கலைத்துறை மூலம் பசுமைக் குடில் பற்றி கேள்விப்பட்டேன்.அலங்காநல்லுார் தோட்டக்கலை வட்டார உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகிய போது பசுமைக்குடில் அமைக்க வழிகாட்டினர்.ஒரு குடிலுக்கு 2000 சதுர மீட்டர் வீதம் 2 குடில்கள் அமைத்தோம். ஒரு குடிலில் 4000 வெள்ளரிச்செடிகள் வளர்கின்றன. விதை நட்ட 25வது நாளில் பூ, 35வது நாளில் பிஞ்சு, 40வது நாளில் காய் தயாராகி விடும். விதைநேர்த்தி செய்யாமல் கம்பெனி விதைகளை நேரடியாக விதைக்கிறோம். இதிலும் 2, 3 ரகங்களில் விதைகள் உள்ளன. வாங்கும் விதையின் கட்டணத்திற்கு ஏற்ப அறுவடையும் நிறைய கிடைக்கும்.40வது நாளில் இருந்து 120 நாள் வரை 8 முதல் 10 முறை அறுவடை செய்யலாம். பூ வந்த 10வது நாளில் காயாகி விடும். ஒரே செடியில் பூவும், பிஞ்சும், காயும் ஒன்றாக சேர்ந்து வந்தால் தான் தொடர்ச்சியாக அறுவடை கிடைக்கும். பிஞ்சுகள் நிறைய உதிர்ந்து கருகிவிடும்.2000 சதுர மீட்டரில் 35வது நாளில் இருந்து 40 நாளுக்குள் ஒரு குடிலில் 20 பெட்டி வீதம் அரை டன் அளவு காய்கள் கிடைக்கும். அடுத்தடுத்த அறுவடையில் ஒரு டன் அளவு வரும். 60 நாளாகும் போது நோய்கள் அதிகம் தாக்கும். சில செடிகள் 80 நாட்கள் கூட தாங்காது. தவிடு, புண்ணாக்கு, டி.ஏ.பி., கொடுத்து காப்பாற்றினால் 120 நாட்கள் வரை வளரும். 10 நாட்களுக்கு ஒருமுறை வீதம் 8 தடவை அறுவடை எடுக்கலாம்.சில நேரங்களில் 3 நாளைக்கு ஒருமுறை முக்கால் டன் அளவு கிடைக்கும். இப்போது கிலோ ரூ.38க்கு விற்கிறோம். குறைந்தபட்சம் ரூ.20க்கும் போகும். அதை விட குறைந்தால் எங்களுக்கு நஷ்டம் தான். இந்த குடில் அமைத்த பின் 3வது முறை அறுவடை எடுக்கிறோம். அறுவடை முடிந்தபின் மண்ணை உழுது ஆட்டு உரம் இட்டு அதன் பின் வெள்ளரி விதை விட்டு மீண்டும் தொடர வேண்டியது தான். சொட்டு நீர்ப்பாசனம் விடுவதால் களைகளின் தாக்கம் அதிகமில்லை. இரண்டு குடில் அமைத்து சொட்டு நீர்ப்பாசனம் செய்வதற்கு ரூ.40 லட்சத்திற்கு மேல் செலவானது. அரசு ரூ.16.88 லட்சம் வரை மானியமாக தந்தது. குடில் அமைக்க ஒருமுறை தான் செலவு. அதன் பின் விதைக்கும் உரத்திற்கும் மட்டும் செலவழித்தால் மீதியெல்லாம் லாபம் தான் என்றார்.இதுகுறித்து தோட்டக்கலை உதவி இயக்குநர் நிர்மலா கூறுகையில், ''மதுரையில் 500 சதுரமீட்டர் முதல் 4000 சதுர மீட்டர் வரை பசுமைக்குடில் அமைக்கலாம். 500 சதுர மீட்டருக்கு குடில் அமைத்தால் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.530 வீதம் மானியமும் 4000 சதுர மீட்டருக்கு எனில் ஒரு சதுர மீட்டருக்கான மானியம் ரூ.422 ஆகவும் உள்ளது. இங்குள்ள மண்ணில் வெள்ளரி, தக்காளி, குடைமிளகாய் நன்றாக வளரும் என்றாலும் விவசாயிகள் வெள்ளரியை விரும்பி பயிரிடுகின்றனர்,'' என்றார்.--எம்.எம்.ஜெயலெட்சுமிமதுரை