உள்ளூர் செய்திகள்

ஆடிப்பட்ட சாகுபடிக்கு நிலக்கடலை

வேர்க்கடலை, மணிலாக்கொட்டை, மல்லாக்கொட்டை, மல்லாட்டை என அழைக்கப்படும் நிலக்கடலை மிகச்சிறந்த பயிர் வகை.இந்தியா, சீனாவில் சமையலறை பயன்பாட்டுக்கு நிலக்கடலை அதிகம் பயன்படுகிறது. நிலக்கடலையில் அதிக புரதம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னிசீயம், கால்சியம், விட்டமின் இ, பாஸ்பரஸ், தயாமின், நயாசின் உள்ளன. இதிலுள்ள நிறைவுறா கொழுப்புகள் நன்மை தருகிறது. ஆடிப்பட்டத்தில் சரியான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாகுபடி செய்தால் மகசூல் அள்ளலாம். சாகுபடி நுட்பம் திண்டிவனம் 7, 13, 14, பி.எஸ்.ஆர். 2, விருத்தாச்சலம் 6, 7, 8 நிலக்கடலை ரகங்கள் ஆடிப்பட்டத்திற்கு ஏற்றவை. நிலத்தை சட்டி கலப்பையால் உழுத பின் 2 முறை கொக்கி கலப்பையால் உழவேண்டும். பின்னர் 12.5 டன் தொழுஉரம் இட்டால் மண்ணின் நீர்ப்பிடிப்புத் திறன் அதிகரிக்கும். இறவை பயிராக இருந்தால் 15 அடிக்கு 10 அடியாக சமதள பாத்தி அமைக்க வேண்டும். மண் பரிசோதனை அடிப்படையில் உரமிடுவதே நல்லது. விதைப்பதற்கு ஏக்கருக்கு 50 கிலோ தேவை. விதைகள் திரட்சியாகவும் 96 சதவீதம் புறத்துாய்மை உள்ளதாகவும் இருக்க வேண்டும். பூச்சி பூஞ்சாண நோய் தாக்குதல் இன்றி குறைந்தபட்சம் 70 சதவீதம் முளைப்புத்திறனும் 9 சதவீத ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனஸ் கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். அடுத்ததாக 2 பொட்டலம் ரைசோபியம், 2 பொட்டலம் பாஸ்போ பாக்டீரியா உரங்களுடன் அரிசிக்கஞ்சி கலந்து விதைநேர்த்தி செய்தால் அனைத்து பூஞ்சாண நோய்களில் இருந்து பாதுகாக்கலாம். உரம் இடுவது அவசியம்தழை, மணி, சாம்பல் சத்துகளை 4:4:18 என்ற அளவில் நிலத்திற்கு உரமிட வேண்டும். அதாவது 10 கிலோ யூரியா, 22 கிலோ சூப்பர் பாஸ்பேட், 25 கிலோ பொட்டாஷ், 100 கிலோ ஜிப்சம் இட்டபின் கடைசி உழவில் ஏக்கருக்கு 5 கிலோ நுண்ணுாட்ட உரமிட வேண்டும். பயிர் எண்ணிக்கையைப் பொறுத்த வரை ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் இருக்க வேண்டும்.இறவை சாகுபடியில் 7:14:21 என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்தாக ஏக்கருக்கு 20 கிலோ யூரியா, 46 கிலோ சூப்பர் பாஸ்பேட், 50 கிலோ பொட்டாஷ் அடியுரமாக இடவேண்டும். அத்துடன் 100 கிலோ ஜிப்சம், 5 கிலோ நுண்ணுாட்ட கலவை இட வேண்டும். ஜிப்சம் இடுவதால் மண் இளக்கமாகி நிலக்கடலையின் விழுதுகள் மண்ணுக்குள் இறங்கி அதிக எண்ணெய் சத்துடன் பொக்கு இல்லாத நிலக்கடலைகள் உருவாகும். களை மேலாண்மைநிலக்கடலை செடியுடன் சாரணை, மூக்கிரட்டை, காட்டு கீரை, அருகு கோரை போன்ற களைகள் அதிகமாக காணப்படும். 20 முதல் 25 வது நாளிலும் 40 முதல் 45 வது நாளிலும் களை எடுக்க வேண்டும். களைகளை கட்டுப்படுத்தாவிட்டால் பயிருக்கு கிடைக்க வேண்டிய சத்துகளை களைகள் உறிஞ்சி விடும். பயிரில் அதிக காய்கள் பிடிக்காமல் விளைச்சல் பாதிக்கப்படும்.முதிர்ந்த இலைகள் காய்வதும் மேல்மட்ட இலைகள் மஞ்சளாவதும் காய்கள் முதிர்ச்சியாவதை குறிக்கும். ஓட்டின் உட்புறம் பழுப்பு கலந்த கருப்பு நிறத்தில் இருந்தால் காய்கள் முற்றியிருக்கும். அறுவடைக்கு முன் நீர் பாய்ச்சினால் சுலபமாக செடிகளை பிடுங்கலாம். காய்களை பிரித்து மிதமான வெயிலில் உலர்த்தி சேமிக்கலாம். காய்கள் 12 சதவீத நீர்ச்சத்துடன் இருக்க வேண்டும்.- மகாலட்சுமி, விதைப்பரிசோதனை அலுவலர்- ராமலட்சுமி, கமலாராணிவேளாண்மை அலுவலர்கள்அரசு விதைப் பரிசோதனை நிலையம்நாகமலை புதுக்கோட்டை,மதுரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !