பூச்சி மேலாண்மை செய்வது எப்படி
பாரம்பரிய முறையிலும் உயிரியல் மற்றும் ரசாயன முறைப்படி பயிர்களின் சேதத்தை குறைப்பதோடு பொருளாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத முறையே ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை.ரசாயன பூச்சிக்கொல்லிகளை குறைப்பதே முதல் நோக்கம். அதன் மூலம் சுற்றுச்சூழலுக்கும் பூச்சிகளால் மனித ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதை தடுக்கலாம். குறிப்பான நஞ்சில்லாத பாதுகாப்பான உணவை நுகர்வோருக்கு வழங்கலாம்.எல்லா பூச்சிகளும் பயிர்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. முக்கிய பூச்சிகள் மற்றும் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளை அடையாளம் காண வேண்டும். அவற்றின் மூலம் தீமை செய்யும் பூச்சிகளை அழித்து பயிர் சேதத்தை குறைக்கலாம். பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மூலம் பயிர் சூழலில் நோய்களை கட்டுப்படுத்தலாம். நோய்களை குறைப்பதன் முதல் படி பயிர் சுழற்சி முறை. ஒரே பயிரை அடுத்தடுத்து பயிரிடும் போது அந்த பூச்சி, புழுக்களின் தாக்குதலை கட்டுப்படுத்த முடியாது. மாற்றுப்பயிர் சாகுபடி செய்யும் போது அவற்றின் தாக்குதலை குறைக்க முடியும். அதேபோல மூடுபயிர், வரிசை மற்றும் பயிர் இடைவெளியும் அவசியம் தேவைப்படும். ஒரு சில பயிர்களைப் பொறுத்தவரை ஒரே நேரத்தில் நடவு மற்றும் அறுவடை செய்யும் போது பொருளாதார சேதம் பரவலாக இருக்கும். நோய்க் கிருமிகள், பூச்சிகளின் இயற்கை எதிரிகளை பெருக்குவதன் மூலம் தாக்குதலையும் சேதத்தையும் குறைக்க முடியும்.