உள்ளூர் செய்திகள்

கல்லா கட்டும் கடக்நாத் கோழிகள்

மத்திய பிரதேசத்தை தாயகமாக கொண்ட கடக்நாத் கோழிகள் அடர் கருப்பு, பொன்னிற இறகு அமைப்பு மற்றும் பழுப்பு நிற உடலுடன் கால், நகங்கள் கருப்பாக காணப்படும்.இது மெதுவாக வளரும் சிறிய நாட்டுக்கோழி என்பதால் புறக்கடை கோழி வளர்ப்பை தொழிலாக செய்யலாம். அதிக புரதத்துடன் கூடிய இறைச்சியில் நோய் எதிர்ப்புத் திறன், உயிர்ச்சத்து, அமினோ அமிலங்கள் நிறைந்தது. அதிக நோய் எதிர்ப்புத் திறன் உள்ளதால் எந்த வித தட்பவெப்ப நிலையிலும் வளர்க்கலாம், இனவிருத்தி செய்யலாம். இதன் அடைகாக்கும் திறன் குறைவு. முட்டைகள் 30 - 35 கிராம் எடையில் இருக்கும்.இதன் கருவுறும் திறன் 69 சதவீதம், 6 மாதத்தில் பருவமடையும். ஆண்டுக்கு 125 முட்டைகள் உற்பத்தி செய்யும். குஞ்சு பொரிக்கும் திறன் 79 சதவீதம். அசில் இனத்தை விட 20 வார வயதுடைய கடக்நாத் இறைச்சியின் தொடை மற்றும் மார்பு சதைகளில் நீர்ச்சத்து அதிகமாக காணப்படும். இறைச்சியை மதிப்பு கூட்டி நக்கட்ஸ் தயாரிக்கலாம். தீவன முறைகள் முதல் மாதத்திற்கு 21 சதவீத புரதம் நிறைந்த அடர்தீவனம், பின்னர் படிப்படியாக 18 சதவீத புரதம் மற்றும் 3000 கலோரி என்ற அளவில் 7 முதல் 14 வார வயது வரை அளிக்க வேண்டும். முதல் 6 வாரங்கள் ஆழ்கூள முறையிலும் பின்னர் புறக்கடை கோழி வளர்ப்பு முறையில் சமையலறை கழிவு, தானியங்கள் அளித்தும் வளர்க்கலாம். சிறிய பறவை என்பதால் பருந்து, பாம்புகளிடம் இருந்து பாதுகாப்பாக வளர்க்க வேண்டும்.கரையான் வளர்ப்பு அவசியம் இவற்றின் வேகமான வளர்ச்சிக்கு கரையான்களை புறக்கடையில் வளர்க்கலாம். மண்பானையில் பழைய சாக்கு அல்லது சாண எரு வைத்து தண்ணீர் தெளித்து கரையான்கள் தென்படும் மண்தரையில் கவிழ்த்து வைக்க வேண்டும். மறுநாள் காலையில் எடுத்தால் கரையான்கள் நிறைந்திருக்கும். அவற்றை கோழிகளுக்கு உணவாக்கி மண்பானையில் மறுபடியும் தண்ணீர் தெளித்து தொடர்ச்சியாக கரையான்களை உற்பத்தி செய்யலாம். அசோலா தீவனம் நல்லது அசோலா என்பது நீர் நிலை, நெல் வயல், குட்டை மற்றும் வாய்க்கால்களில் வளரக்கூடியது. பொதுவாக விதையில்லா இனப்பெருக்கம் செய்யலாம். 7 நாட்களில் இருமடங்கு எடையில் உற்பத்தியாகும். ஆண்டுக்கு ஒரு எக்டேரில் 9 டன் புரதம் உற்பத்தி செய்யும். இதில் 24 சதவீதம் புரதம் உள்ளது. இதை உணவாக கொடுப்பதன் மூலம் கோழிகளின் தீவனச் செலவை குறைக்கலாம்.குஞ்சுகள் பராமரிப்பு ஒரு வார குஞ்சுகளுக்கு கொதிக்கவைத்து ஆறவைத்த குடிநீரில் நோய் எதிர்ப்பு மருந்து கலந்து அளிக்க வேண்டும். இரவில் பாதுகாப்பான காற்றோட்டமான இடத்தில் அடைக்க வேண்டும். கோழிகளை புறக்கடையில் மேய விட வேண்டும். சமையல் கழிவுகள், தானியங்களையும் கோ 4 புல், கீரை வகைகளை நறுக்கி கொடுக்கலாம். தண்ணீருடன் வாரம் ஒருமுறை வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மருந்து கலந்து கொடுப்பது நல்லது. கரையான், கடலை புண்ணாக்குத் துாள், கருவாட்டுத்துாள் உணவாக தரலாம்.தடுப்பூசி அவசியம்7வது நாளில் ராணிக்கெட், 10 - 12 நாளில் ஐ.பி.டி., தடுப்பூசி, 3வது வாரம் ராணிக்கெட், 6வது வாரம் கோழி அம்மை, 8வது வாரம் ராணிக்கெட் (லசோட்டா) தடுப்பூசிகளை கண், மூக்கு, வாய் வழியாக செலுத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்