செரிமானத்தை துாண்டும் குடவாழை நெல் சாகுபடி
குடவாழை நெல் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் ஒன்றியம் நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நீலபூ.கங்காதரன் கூறியதாவது: நான் பல வித பாரம்பரிய ரக நெல் மற்றும் பயறு வகை பயிர்களை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், பாரம்பரிய ரக நெல்லில் குடவாழை ரக நெல்லை சாகுபடி செய்து வருகிறேன். இது, சீதோஷன நிலையை பொருத்து, 130 நாளுக்கு முன்னதாகவே அறுவடைக்கு வரும். இந்த ரக நெல் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஒரு ஏக்கர் நிலத்திற்கு, 15 நெல் மூட்டைகள் மட்டுமே மகசூல் கிடைக்கும். இந்த நெல்லை அரிசியாக மாற்றி விற்பனை செய்யும் போது, கணிசமான வருவாய் ஈட்ட முடியும். இந்த குடவாழை அரிசியில், நார்ச்சத்து, தாதுச்சத்து, உப்புசத்து அதிகம் உள்ளதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து உடலை உற்சாகமாக வைக்க உதவுகிறது. குறிப்பாக, இந்த அரிசியை தினமும் எடுத்துக் கொள்வதனால், செரிமானத்தை துாண்டி உள் உறுப்புகள் பலமடைவதுடன், தேகம் பளபளப்பாகும். மேலும், தோல் பிரச்னைகளை சரி செய்யும். இதுதவிர, குடைவாழை அரிசியை மூன்று வேளையும் உணவாக எடுத்துக் கொண்டால் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம். நாள்பட்ட கழிவு தேக்கம், குடல் ஆரோக்கியம், வயிறு பிரச்னைகளை இந்த குடவாழை அரிசி நீக்கும் தன்மை உள்ளது. இதனால், சந்தையில் கூடுதல் விலை கொடுத்து வாங்கவும் தயக்கம் காட்டுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: நீலபூ.கங்காதரன், 96551 56968