உள்ளூர் செய்திகள்

மழைக்கால நோய்களும் எதிர் உயிரிகளும்

தென்னையில் மழைக்காலங்களில் குருத்தழுகல், அடித்தண்டழுகல் மற்றும் சாறுவடிதல் நோய்கள் உருவாகும். பாக்டீரியா மற்றும் பூஞ்சாண வகையைச் சார்ந்த நோய்காரணிகள் பெருகி அதிகமான நோய்களை உண்டாக்குகின்றன.இன்றைய வேளாண்மையில் அதிகளவு ரசாயன பூசணக்கொல்லிகளை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு ரசாயன எச்சம் காரணமாக நோய்க்காரணிகள் அதிக வீரியம் பெறுகின்றன. மேலும் ரசாயனங்கள் உணவுப்பொருட்களில் தங்கி உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கிறது, ஆனால் உயிர் எதிர்கொல்லிகளை பயன்படுத்துவதால் அத்தகைய சீர்கேடு ஏற்படுவதில்லை. ஒருங்கிணைந்த பயிர் நோய் மேலாண்மையில் எதிர் உயிரிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.உயிரியல் முறை நோய் மேலாண்மைஉயிரியல் முறை நோய் மேலாண்மை என்பது நுண்ணுயிரிகளைக் கொண்டு நோய்க் காரணிகளை அழித்து பயிர்களைப் பாதுகாக்கும் முறை. இவை பிற உயிரினங்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. இவற்றுள் பூசணங்களும், பாக்டீரியாக்களும் அடங்கும். பாக்டீரியா மற்றும் பூஞ்சாண வகையைச் சார்ந்த பேசில்லஸ் சப்டிலிஸ், டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவை அதிகளவில் எதிர் உயிரிகளாக பயன்படுத்தப்படுகிறது. தீவிர வேளாண்மையில் மண், வேர் மற்றும் இலை மூலமாகப் பரவும் நோய்கள் பெரும் பாதிப்பை உருவாக்குகின்றன. எனவே எதிர் உயிரிகளைக் கொண்டு தென்னையைத் தாக்கும் பலவிதமான நோய்களுக்கு எதிர்ப்பாற்றல் அளிக்க முடியும்.டிரைக்கோடெர்மா விரிடிடிரைக்கோடெர்மா விரிடி (டி.அஸ்பெர்ல்லம்) என்பது பூசண வகையைச் சேர்ந்த நுண்ணுயிரி. இது மண் மற்றும் வேர் மூலம் பரவும் நோய்களிலிருந்து தென்னையை பாதுகாக்கிறது. டிரைக்கோடெர்மா விரிடி தென்னையின் நோய்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டுப்படுத்துகிறது. இது டிரைக்கோடெர்மின், டிரைக்கோவிரிடின், செஸ்கூடெர்பினாஹெப்டாலிக் அமிலம் மற்றும் டெர்மாடின் போன்ற நோய் எதிர்ப்பு பொருட்களை உற்பத்தி செய்து பயிர் நோய்களை நேரடியாக கட்டுப்படுத்துகிறது. டிரைக்கோடெர்மா விரிடி நோய்கிருமிகளை எதிர்த்து அழிப்பதுடன் பயிரின் வேர் மற்றும் பயிர்வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்கள், பிற வளர்ச்சி ஊக்கிகளை சுரப்பதால் பயிர் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கிறது. டிரைக்கோடெர்மா விரிடியை பிற பாக்டீரியா நுண்ணுயிர் உரங்களுடனும் பிற எதிர் உயிரிகளுடன் கலந்து பயன்படுத்தலாம். ஒரு கிலோ வேப்பம்புண்ணாக்கு, மட்கிய சாண எருவுடன் 200 கிராம் டிரைக்கோடெர்மா விரிடியை கலந்து மண்ணில் இட்டு தென்னை அடித்தண்டழுகல் மற்றும் சாறு வடிதல் நோய்களை கட்டுப்படுத்தலாம். பேசில்லஸ் சப்டிலிஸ்பேசில்லஸ் சப்டிலிஸ் பயிர்களுக்கு நன்மை தரக்கூடிய பாக்டீரியா வகையைச் சேர்ந்த நுண்ணுயிரி. பேசில்லஸ் தென்னையின் நோய்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டுப்படுத்துகிறது. இது நோய்களைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஆக்ஸின், ஜிப்பரலின் மற்றும் இன்டோல் அசிடிக் அமிலத்தை சுரந்து பயிர்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. பேசில்லஸ் சப்டிலிஸ் 200 கிராம் பவுடரை மட்கிய சாண எருவுடன் கலந்து நோய் தாக்கிய மரங்களைச் சுற்றி மண்ணில் இட வேண்டும். இதன் மூலம் தென்னை குருத்தழுகல், அடித்தண்டழுகல், சாறு வடிதல், சாம்பல் இலைப்புள்ளி, இலை அழுகல் மற்றும் கேரளா வேர் வாடல் நோய்களிலிருந்து பாதுகாக்கலாம்.இந்த எதிர் உயிரி கலவையை மற்ற ரசாயன பூசணக்கொல்லிகள், பூச்சிக் கொல்லி மருந்துகளுடன் கலக்கக்கூடாது. இந்த கலவையை உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா மற்றும் வேம் ஆகியவற்றுடன் கலந்து இடலாம். இப்படிச் செய்வதால் தென்னை மரங்களின் வளர்ச்சி, மகசூல் அதிகரிக்கும். நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும். அனைத்து பயிர்களுக்கும் ஏற்றது. மண்ணிலுள்ள வளத்தைப் பயன்படுத்தி நுண்ணுயிரிகள் பன்மடங்காக பெருகி மரங்களுக்கு நீண்ட கால பாதுகாப்பை தருகிறது. இதர உயிரினங்களுக்கும் தோட்டத்தில் உள்ள மண்புழுக்களுக்கும் தீமை விளைவிப்பதில்லை. ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் பேசில்லஸ் சப்டிலிஸ், டிரைக்கோடெர்மா விரிடி உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.-- லதா, இணைப்பேராசிரியை (பயிர் நோயியல்)- பமீனாபேராசிரியை (பயிர் நோயியல்) - சுதாலட்சுமி, தலைவர்தென்னை ஆராய்ச்சி நிலையம் ஆழியார் நகர், பொள்ளாச்சி 04253 - 288 722


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !