வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நன்றி மேடம்
பயிர்களின் பச்சையத்தை சாப்பிடும் சைவப்பூச்சிகளே கெட்ட பூச்சிகள். அந்த பூச்சிகளை கொல்லும் அசைவ பூச்சிகள் தான் நல்ல பூச்சிகள். தீமை செய்யும் பூச்சிகள் உருவாகும் போது நன்மை செய்யும் பூச்சிகள் தானாக உருவாகும். இதனால் பயிருக்கு கெடுதல் இல்லை. 'ப்ரீடேட்டர்' எனப்படும் இரைவிழுங்கிகளாக சிலந்தி, பொறிவண்டு, சிர்பிடு ஈ, கொலைகார நாவாய் பூச்சி, கும்பிடு பூச்சி எனப்படும் பெருமாள் பூச்சி, பச்சை கண்ணாடி இறக்கை பூச்சிகளைச் சொல்லலாம். ஒட்டுண்ணி வகையில் 95 சதவீத குளவியும், வெவ்வேறு வகையான ஈக்கள் 5 சதவீதம் வருகின்றன. இவை நன்மை செய்யும் பூச்சிகள். பயிர்களின் 15வது நாள் தாக்குதல் நெல்லோ, கரும்போ, பருத்தியோ, காய்கறியோ ஏதோ ஒன்று வயலில் இருந்தால், பயிரின் 15 வது நாளில் அசுவினி, தத்துப்பூச்சி, இலைப்பேன், மாவுப்பூச்சி, செதில் பூச்சி என சாறு உறிஞ்சும் பூச்சிகள் வந்து விடும். இவை இலைக்கு பின்னால் உட்கார்ந்து அதன் சாறை உறிஞ்சும். இவை வந்து விட்டாலே அவற்றை சாப்பிடும் சிலந்தி, பொறிவண்டு, பிற பூச்சிகளும் இயற்கை சமநிலைப் படி தானாக வயலுக்கு வந்து விடும். சைவ, அசைவ பூச்சிகளின் வித்தியாசம் நெல்லில் நாற்று நட்ட 25 வது நாளில் இலைச்சுருட்டு புழு, குருத்துப்பூச்சி தாக்குதல் ஏற்படும். அதாவது இலையை சுருட்டிக் கொண்டு புழுவும் குருத்துக்குள் பூச்சியும் உட்கார்ந்திருக்கும். இதை சாப்பிடுவதற்காக நெல்லின் மேல் சிலந்தி வலை பின்னி காத்திருக்கிறது. குளவி, புழுவின் மேல் முட்டை போட காத்துக் கொண்டிருக்கும். இ ப்போது பூச்சிமருந்து தெளித்தால் நன்மை செய்வதற்காக வெளிவட்டத்தில் காத்திருக்கும் சிலந்தியும், குளவியும் தான் அழியும். எனவே வயலில் நன்மை செய்யும் பூச்சிகள் இருமடங்கு இருந்தாலே பூச்சிக்கொல்லி பயன்படுத்த தேவையில்லை. வயலாய்வு அவசியம் விவசாயிகள் வாரந்தோறும் குறிப்பிட்ட நாளில் வயலையும் காலநிலையையும் ஆய்வு செய்ய வேண்டும். வெயில், வறட்சி அதிகரிக்கும் என்றால் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதுவே மழை பெய்தால் சாறு உறிஞ்சும் பூச்சிகளை மழை அடித்துச் சென்று விடும். வயலை ஆய்வு செய்யும் போது இதை கண்காணிக்க வேண்டும். வயலில் சதுரமாக அளவெடுத்து அதன் குறுக்கும் நெடுக்குமாக முன்னால், பின்னால் நடக்கும் போது வயலில் உள்ள பூச்சிகளை பார்வையிட வேண்டும். களைச்செடிகளே எதிரி வயலில் உள்ள களைச்செடிகள் பயிர்களின் உரத்தை தான் எடுத்துக் கொண்டு பயிருக்கு போட்டியாக வளரும். இச்செடிகள் தான் பூச்சிகளின் முட்டைப்பருவத்தையும் கூட்டுப்புழு பருவத்தையும் தாங்கி நின்று தீமை செய்யும் பூச்சிகளின் வளர்ச்சியை அதிகப்படுத்துகின்றன. எனவே களை எடுப்பது என்பது அவசியம். பயிர்களுக்கு தாங்கும் திறன் உள்ளது மண்ணின் தன்மை, போதுமான ஈரப்பதம் உள்ளதா என்பதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். பயிர்களின் தாங்கும் திறனை கணக்கிட வேண்டும். உதாரணமாக நெல்லில் ஒரு கதிர் உருவாக வேண்டும் எனில் குறைந்தது 15 முதல்17 இலைகள் உருவாக வேண்டும். இலையின் சத்துகள் தான் கதிரை உருவாக்கும். ஆனால் 3 முதல் 4 இலைகள் இருந்தாலே கதிர் உருவாகும். பூச்சிகள் இலைகளை சாப்பிட்டாலும் மீதி இலைகள் இருந்தாலே கதிர் உருவாகும். இதைத் தான் உலக உணவு மற்றும் வேளாண் கழகத்தில் விவசாயிகளுக்கு கற்றுத் தருகிறோம். இலை வெட்டிய இடத்திலும் இலை வெட்டாத இடத்தில் வளரும் கதிர்கள் ஒரே மாதிரி உள்ளது. பயிர்கள் அதற்கேற்ப தன்னை உருவாக்கிக் கொள்ளும். எல்லைப்பாதுகாப்பு படை எந்த விதமான பயிர்களை சாகுபடி செய்தாலும் அதற்கு வரப்பு பயிர், ஊடுபயிர் தனியாக பயிரிடுவது அவசியம். வரப்பு முழுவதும் உள் வட்டத்தில் தட்டைபயறு எனப்படும் காராமணி பயிர்களை பயிரிட வேண்டும். காராமணி பயிரிட்டாலே தீமை செய்யும் அசுவினி பூச்சிகள் (சாறு உறிஞ்சி) கூட்டமாக வந்து விடும். இதை சாப்பிடுவதற்காக நன்மை செய்யும் பூச்சிகளும் வந்து சேர்ந்து விடும். இவை தான் உங்கள் வயலுக்கான எல்லைப்பாதுகாப்பு படை. அடுத்த வெளிவட்டத்தில் கம்பு, சோளம், மக்காச்சோளம் ஏதாவது ஒன்றை தட்டைபயறுக்கு அடுத்து நெருக்கமாக நடவு செய்ய வேண்டும். அடுத்தடுத்த இரு வயல்களுக்கு நடுவே தடுப்புச் சுவர் போல இப்பயிர்கள் பூச்சிகளிடமிருந்து காக்கும். முக்கிய பயிர் நிலக்கடலையாக இருந்தால் தடுப்பு பயிராக கம்பு நடலாம்; மற்ற பயிர்களுக்கு மக்காச்சோளமும் சோளம் நடவு செய்திருந்தால் தீவனச்சோளமும் தடுப்பு பயிராக பயிரிடலாம். ஆமணக்கு (கொட்டமுத்து) எனப்படும் செடியை எட்டடிக்கு ஒன்று வீதம் வயலின் வெளிவட்டத்தில் நட வேண்டும். அடுத்த வயலில் இருந்து கெடுதல் செய்யும் பூச்சிகள் வரும் போது ஆமணக்கு இலை விரிந்து நின்று வாவென்று அழைக்கும். அங்கேயே முட்டையிடும். இதை வாரம் ஒருமுறை வயலாய்வு செய்யும் போது இலைக்கு மேல் உள்ள பூச்சி, புழுவை கையோடு சேகரித்து அழிக்க வேண்டும். இதிலிருந்து வருமானம் பெற வேண்டியதில்லை. கடைசியாக குளவிகளை வயலுக்கு ஈர்க்க வேண்டும் எனில் செண்டுப்பூ, கேந்திப்பூ, சாமந்தி எனப்படும் மஞ்சள் நிற பூச்செடிகளை ஆமணக்கு செடிகளின் இடைவெளியில் வரிசையாக நட வேண்டும். இதனால் வயலில் நன்மை செய்யும் பூச்சிகள் நிரம்பி விடும். நெல்லுக்கு ஆமணக்கு தேவையில்லை. நான்கு மூலைகளில் மக்காச்சோள பயிர்களை பறவை தாங்கியாக வளர்த்தால் போதும். தட்டை பயறும், மஞ்சள் நிற பூச்செடியும் வரப்பில் இருக்க வேண்டும். வேம்பும், பூண்டுச் சாறும் வயலில் நடவு செய்த 15 ம் நாளில் 100 பூச்சிகள் இருப்பதாக கணக்கிட்டால் அதில் 25 முதல் 40 வகை பூச்சிகள் பயிர்களுக்கு கெடுதல் செய்யும். மீதி நன்மை செய்வன. வரப்பு பயிர்களை இந்த முறையில் பயிரிட்டால் நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை 80 சதவீதமாகி விடும். பூச்சிக்கொல்லி தேவையில்லை. மீதியுள்ள தீமை செய்யும் பூச்சிகளை விரட்ட வேப்பங்கொட்டை, வெள்ளைப்பூண்டு சாறு பயன்படும். 5 கிலோ வேப்பங்கொட்டை, அரைகிலோ சிறிய ரக நாட்டுப்பூண்டு இரண்டையும் இடித்து துணியில் முடித்து வைத்து 10 லிட்டர் மாட்டு கோமியத்தில் 24 முதல் 72 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். இதனுடன் 100 கிராம் காதி சோப் சேர்க்க வேண்டும். ஒரு டாங்க் தண்ணீருக்கு ஒரு லிட்டர் அளவு வேம்பு, பூண்டு கரைசலை மாலையில் பூச்சி நடமாடும் நேரத்தில் தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். இதன் கசப்புத்தன்மையால் பூச்சிகள் முட்டையிடாது, புழு இலைகளை சாப்பிடாது. பூச்சிகளின் வளர்ச்சி நிலையைத் தடுப்பது தான் இதன் இலக்கு. குறிப்பாக நெல்லுக்கு உலகம் முழுவதும் கடைப்பிடிக்கும் நடைமுறை இது தான். 5 ஏக்கருக்கு ஒரு எண்ணிக்கையில் விளக்குப்பொறி, குருத்துப்பூச்சிக்கு ஏக்கருக்கு 5 இடங்களில் இனக்கவர்ச்சி பொறி வைத்தால் போதும். இந்த நடைமுறைகளை விவசாயி கள் முழுமையாக பின்பற்றினால் பூச்சிக்கொல்லி மருந்தே தேவையில்லை, பயிர்களும் நஞ்சாகாது என்றார். இவரிடம் பேச அலைபேசி: 94435 38356. -எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை
நன்றி மேடம்