செடியை உடைத்து நட்டால் செழித்து வளரும் தவசி கீரை
தவசி கீரை சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த, பிச்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பி.எல்.ஆர்., பண்ணை முதுகலை பட்டதாரி விவசாயி பி.மாதவி கூறியதாவது:சவுடு மண் நிலத்தில், இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறி, பூ, பழங்கள் ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், தவசி கீரை சாகுபடி செய்துள்ளேன். இது, கொடி போல் படரும் கீரை வகையாகும். நம்மூர் சவுடு மண்ணுக்கு, தவசி கீரை அருமையாக படர்ந்து செல்கிறது. இந்த கீரை செடியை, உடைத்து மண்ணில் நட்டால் போதும். நட்ட கிளையும், துளிர் விட்டு மீண்டும் மகசூல் கொடுக்கதுவங்கும்.குறிப்பாக, தவசி கீரையில், நார்ச்சத்து உள்ளிட்ட அனைத்து விதமான சத்துக்கள் நிறைந்து இருப்பதால், பிற கீரைகளை காட்டிலும் சந்தையில் அதிக மதிப்பு உள்ளது.இந்த கீரையின் நன்மை தெரிந்த வாடிக்கையாளர்கள், கூடுதல் விலை கொடுத்து வாங்குவதற்கும் தயக்கம் காட்டுவதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: பி. மாதவி, 97910 82317.