உத்தரவாத திட்டங்கள் சுமையே அமைச்சர் பரமேஸ்வர் ஒப்புதல்
பெங்களூரு: 'உத்தரவாத திட்டங்கள் அரசுக்கு சுமையே என்பது முன்கூட்டியே தெரியும்,'' என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறி உள்ளார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:உத்தரவாத திட்டங்கள் மூலம் ஏழைகள் பயனடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஆனால், பா.ஜ.,விற்கு ஏழைகளுக்கு உதவி செய்வது பிடிக்கவில்லை.ஏழை மக்கள் பயனடையும் உத்தரவாத திட்டங்களை பா.ஜ., முடக்க பார்க்கிறது. ஏழைகளுக்காக பா.ஜ., இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இவர்களின் செயல்பாடுகளை மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கின்றனர்.பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட நிதி, அவர்களுக்கு சரியாக வழங்கப்படுகிறது. இதில் எந்த கால தாமதமும் ஏற்படுவதில்லை. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணம், கொள்ளை அடிக்கப்படவில்லை. உத்தரவாத திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் பரிந்துரை வழங்கினாலும், அதை பற்றி ஆலோசனை நடத்தப்படும்.உத்தரவாத திட்டங்களில் இருந்து வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் உட்பட பலர் வெளியேறி விட்டனர். உத்தரவாத திட்டங்கள் ஏழைகளை மையப்படுத்தியே செயல்படுகிறது. வரும் காலங்களில் இத்திட்டங்களில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.இந்த உத்தரவாத திட்டங்கள் அரசுக்கு சுமையை ஏற்படுத்துகிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், ஏழைகளுக்காக இந்த சுமையை அரசு ஏற்க வேண்டும். பெலகாவியில் பஸ் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மண்டல போலீஸ் ஐ.ஜி., மற்றும் போலீஸ் எஸ்.பி.,க்கு உத்தரவிட்டு உள்ளேன்.இந்த விவகாரத்தில் கன்னட அமைப்பினர் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், சட்டம் தன் கடமையை செய்யும்.மஹாராஷ்டிரா, கர்நாடகா எல்லைப் பகுதியில் பஸ்கள் ஓடவில்லை. மைசூரு உதயகரி கலவரத்தில் பா.ஜ., அரசியல் செய்ய வேண்டாம். வரும் தேர்தல்கள் சிவகுமார் தலைமையில் நடக்கும் என அவர் சொல்லியதில் என்ன தவறு உள்ளது. இந்த விவகாரத்தில் என்னால் எந்த கருத்தும் கூற முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.