திருட்டு வழக்கில் 2 பேர் கைது மொபைல், மடிக்கணினிகள் பறிமுதல்
பெங்களூரு: திருட்டு வழக்கில் அசாம் மாநிலத்தை சேர்ந்த, இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 5.79 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொபைல்கள், மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. பெங்களூரு மாதேஸ்வர நகரில் உள்ள வீட்டில் கடந்த மார்ச் 28ம் தேதி, ஜன்னல் ஓரமாக சார்ஜிங் போடப்பட்டு இருந்த, மடிக்கணினி திருடப்பட்டது. இதுகுறித்த புகாரில் மைகோ லே - அவுட் போலீசார் விசாரித்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், அசாம் மாநிலத்தை சேர்ந்த கபீர் உசேன், 25, அபு சைப், 25 ஆகியோர் நேற்று முன்தினம் சில்க் போர்டு பகுதியில் சுற்றி திரிந்த போது கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 5.79 லட்சம் ரூபாய் மதிப்பிலான 23 மொபைல் போன்கள், 3 மடிக்கணினிகள், ஒரு டேப் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனேக்கல் தாலுகா பல்லுார் கிராமத்தில் வசிக்கும் இவர்கள், அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்தனர். பகலில் வேலை முடிந்ததும் இரவில் திருட செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். திருடிய மொபைல், மடிக்கணினியை விற்று கிடைக்கும், பணத்தை ஆடம்பரமாக செலவு செய்து உள்ளனர். இவர்கள் கைதாகி இருப்பதன் மூலம் மைகோ லே - அவுட், மாரத்தஹள்ளி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில், பதிவாகி இருந்த 17 திருட்டு வழக்குகளுக்கு, தீர்வு கிடைத்து உள்ளது.