நந்தினி பால் வேன் மோதி 2 மருத்துவ மாணவர்கள் பலி
ஷிவமொக்கா : தாவணகெரேயை சேர்ந்தவர் ஆதித்யா, 21, உடுப்பியை சேர்ந்தவர் சந்தீப், 21. ஷிவமொக்கா மருத்துவ கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தனர். நேற்று காலையில் இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் பங்கிற்கு சென்றனர். பெட்ரோல் போட்டு விட்டு, விடுதிக்கு திரும்பி கொண்டிருந்தனர். ஷிவமொக்கா - சாகர் சாலையில், கோவில் சதுக்கம் அருகே வரும்போது, எதிரே வந்த நந்தினி பால் வேன், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், இரு மாணவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த ஷிவமொக்கா மேற்கு போக்குவரத்து போலீசார், பால் வேன் ஓட்டுநரை கைது செய்து விசாரிக்கின்றனர். தொழிலாளி பலி பெங்களூரு ஜெயநகர் 4வது பிளாக்கில் வசித்தவர் சம்பங்கி, 64; கூலி தொழிலாளி. மெஜஸ்டிக் பஸ் நிலையம் செல்வதற்காக நேற்று காலை 6:00 மணிக்கு, பஸ் நிறுத்தத்தில் நின்றார். அந்த வழியாக வந்த மெஜஸ்டிக் செல்லும் பி.எம்.டி.சி., பஸ்சின் படிக்கட்டில் ஏறினார். அதற்குள் டிரைவர், பஸ்சின் கதவை அடைத்தார். நிலை தடுமாறி சாலையில் விழுந்த சம்பங்கியின் மீது, பஸ்சின் சக்கரம் ஏறி, இறங்கியது. உடல் நசுங்கி இறந்தார். ஜெயநகர் போலீசார் விசாரிக்கின்றனர். பெங்களூரில் ஒரே மாதத்தில் பி.எம்.டி.சி., பஸ்களால் ஏழு பேர் இறந்துள்ளனர்.