உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பல மாதங்களாக சம்பளம் பாக்கி 30 மார்ஷல்கள் ராஜினாமா

பல மாதங்களாக சம்பளம் பாக்கி 30 மார்ஷல்கள் ராஜினாமா

பெங்களூரு : பல மாதங்களாக சம்பளம் வழங்காததால், ஏரி பராமரிப்புப் பணி செய்த மாநகராட்சியின் 30 மார்ஷல்கள் ராஜினாமா செய்துள்ளனர்.பெங்களூரு மாநகராட்சியின் பல பிரிவுகளில் மார்ஷல்கள் பணி செய்து வருகின்றனர். திடக்கழிவு மேலாண்மையில் பணியாற்றும் மார்ஷல்கள், குப்பை கிடங்கிற்கு சென்று, குப்பை சரியாக தரம் பிரிக்கப்படுகிறதா, குப்பையை தரம் பிரித்து மக்கள் போடுகின்றனரா என்பதை ஆய்வு செய்கின்றனர். குப்பையை தரம் பிரிக்காத மக்களிடம் அபராதம் வசூலிக்கின்றனர்.

குறைந்த சம்பளம்

இதுபோல ஏரிகள் பராமரிப்பு, சாலை, நடைபாதைகள் பராமரிப்பு உட்பட பல துறைகளுக்கு, தனித்தனியாக மார்ஷல்கள் உள்ளனர். இவர்களுக்கு சம்பளமாக மாதம் 20,000 முதல் 25,000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.தினமும் 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் பணி செய்து வருகின்றனர்.இந்நிலையில் ஏரிகள் பராமரிப்பு துறைக்கு உட்பட்ட வர்த்துார், பெல்லந்துார் ஏரிகளை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை தடுக்கவும் 50 மார்ஷல்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் 30 பேர், பணியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்களுக்கு பல மாதங்களாக, மாநகராட்சி சம்பளம் வழங்கவில்லை.இதுகுறித்து பெயர் கூற விரும்பாத மார்ஷல் ஒருவர் கூறுகையில், ''மாநகராட்சி அதிகாரிகள் மார்ஷல்களிடம் அதிக வேலை வாங்குகின்றனர். ஏதாவது தவறு செய்தால் பணி நீக்கம் செய்வோம் என்று மிரட்டுகின்றனர். மாதம் 20,000 ரூபாய் சம்பளம் பேசி பணி அமர்த்தப்பட்ட மார்ஷல்களுக்கு 13,000 ரூபாய் தான் கிடைக்கிறது. மாதம் 25,000 ரூபாய்க்கு பணிக்கு சேர்ந்தவர்களுக்கு 17,000 முதல் 20,000 ரூபாய் வரை தான் கிடைக்கிறது. இதை வைத்துக் கொண்டு எப்படி குடும்பம் நடத்துவது? சில மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. வேறு வழியின்றி ராஜினாமா செய்துள்ளோம்,'' என்றார்.

துறை மாற்றம்

ஆனால் சம்பளம் வழங்காததற்கு மாநகராட்சி புதிய காரணம் கூறி உள்ளது. ஏரிகளை பராமரித்த மார்ஷல்களுக்கு முன்பு திடக்கழிவு மேலாண்மை துறை சம்பளம் வழங்கியது. தற்போது சம்பளம் வழங்கும் பொறுப்பு, ஏரி பராமரிப்புத் துறையிடம் கொடுக்கப்பட்டு உள்ளது.இந்த மாற்றத்தால் மார்ஷல்களுக்கு சம்பளம் போடுவதில் தாமதம் ஆவதாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். மார்ஷல்கள் குறைந்த அளவே இருப்பதால், ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் நடப்பதாக வர்த்துார், பெல்லந்துார் ஏரியை சுற்றி வசிக்கும் மக்கள் புகார் கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை