800 ஆண்டு பழமையானது
கேரளாவில் பகவதி கோவில்கள் ஏராளமாக உள்ளன. இங்கு வழிபாடுகள் மாறுபட்டதாக இருக்கும். அதேபோன்று கர்நாடகாவின், மங்களூரில் பகவதி கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள பகவதி மிகவும் சக்தி வாய்ந்தவர்.தட்சிணகன்னடா மாவட்டம், மங்களூரு நகரின் இதய பகுதியில், கொடியாள்பைலில் குத்ரோலி பகவதி கோவில் அமைந்துள்ளது. 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 800 ஆண்டுகள் பழமையானது. 14 பகவதிகளை ஒன்றாக பூஜிக்கும் ஒரே கோவில் இதுவாகும். 14 பகவதிகளை ஒன்று சேர்க்கும் இடமாகும். இத்தகைய அற்புமான கோவிலை வேறு எங்கும் காண முடியாது. குழந்தை வரம்
காளி என்றும் அழைக்கப்படும் பகவதி, சிவனின் உத்தரவுபடி பூமிக்கு வந்ததாக ஐதீகம். மஞ்சண்ணா நாயக் என்ற ஜமீன்தாருக்கு குழந்தைகள் இல்லாமல் இருந்தது. எனவே இவர், தனக்கு குழந்தை வரம் அளிக்கும்படி பகவதி தேவியை வேண்டினார். அவரது வேண்டுதல் நிறைவேறி குழந்தை பிறந்தது. இதற்காக மங்களூரின் கொடியாள்பைலுவில் உள்ள தன் நிலத்தை, பகவதி தேவிக்கு காணிக்கையாக செலுத்தினார். இந்த இடமே புண்ணிய தலமாக மாறியுள்ளது.கோவிலில் 6 அடி உயரமான கொடிக்கம்பம் அமைந்துள்ளது. இது மிகவும் சிறப்பானது. இதில் மஹேஸ்வரர், பகவதி தேவியின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த கம்பத்துக்கு தெய்வீக சக்தி இருப்பதாக, பக்தர்கள் நம்புகின்றனர்.பண்டிகை நாட்களில் மல்லிகை, கனகாம்பரம் பூக்களால் அலங்கரித்து, பூஜிப்பது வழக்கம். கோவிலில் நவராத்திரி திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். நாராயண குரு
கர்நாடக, கேரள சிற்பிகள், கறுப்பு கிரானைட் மற்றும் மரக்கட்டைகள் பயன்படுத்தி, பகவதிக்கு கோவில் கட்டினர். கோவில் வளாகத்தில் பிரம்மஸ்ரீ நாராயண குருவின் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.பகவதி தேவியை தரிசிப்போருக்கு, வாழ்க்கையில் கஷ்டங்கள் விலகும், மனதில் நிம்மதி கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் வெளி மாநிலங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து 347 கி.மீ., மைசூரில் இருந்து 253 கி.மீ., தொலைவில் குத்ரோலி பகவதி கோவில் அமைந்துள்ளது. அனைத்து நகரங்களில் இருந்தும், குத்ரோலிக்கு அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ரயில்களும் இயக்கப்படுகின்றன.தரிசன நேரம்: காலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை.தொடர்பு எண்: 0824 249 1001, 88676 10001. - நமது நிருபர் -