உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 91,278 வாக்காளர் பெயர்கள் நீக்க படிவங்கள் சமர்ப்பிப்பு

91,278 வாக்காளர் பெயர்கள் நீக்க படிவங்கள் சமர்ப்பிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து 91,278 பெயர்களை நீக்க, வாக்காளர் படிவம் 7 சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அன்புகுமார் கூறினார். நேற்று அவர் அளித்த பேட்டி: யாரோ ஒரு நபர் படிவம் 7ஐ சமர்ப்பித்தார் என்பதற்காக, வாக்காளர் பட்டியலிலிருந்து எந்தவொரு வாக்காளரின் பெயரும் உடனடியாக நீக்கப்படாது. இதுவரை ஒரு வாக்காளர் கூட நீக்கப்படவில்லை. வாக்காளர் பெயரை நீக்க கோரும் படி வம் 7ஐ பெற்றதும், தேர்தல் பதிவு அதிகாரி, அதற்குரிய நடைமுறைகளை பின்பற்றுவார். படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்காளரின் பெயர், படிவத்தை சமர்ப்பித்த நபருக்கும் நோட்டீஸ் அளிக்கப்படும். இருதரப்பினரிடமும் விசாரணை நடத்திய பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும். வேண்டுமென்றே தவறான தகவல்களை தந்து வாக்காளர்கள் பெயரை நீக்க முயல்பவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில், பா.ஜ., பூத் ஏஜன்ட் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவது குறித்து என்னால் பதில் சொல்ல முடியாது. அது போலீஸ் துறைக்கு உட்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்கக்கோரி, ஜூன் 16ம் தேதி முதல் கடந்த 4ம் தேதி வரை மொத்தம் 91,278 படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. இதில், செப்.,23ம் தேதி வரை சமர்ப்பிக்கப்பட்ட படிவங்கள் விசாரிக்கப்படும். இதன் முடிவுகள் வரும் 27ம் தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் எதிரொலிக்கும். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு, புதிய வாக்காளர்களை சேர்க்க சிறப்பு பிரசாரம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ., மீது புகார்

பெங்களூரு ஜெயநகர் தொகுதியில், படிவம் 7ஐ பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலிலிருந்து சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்த 5,698 பேரை நீக்க, அத்தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., ராமமூர்த்தி சதி செய்ததாக, முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சவுமியா ரெட்டி, ஜெயநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில், 'ஜெயநகர் தொகுதியில் குரப்பனபாளையா வார்டில் மட்டும் 4,327 பேரை நீக்க சதி நடந்து உள்ளது' என குறிப்பிடப்பட்டு உள்ளது.

அமைச்சர் பாய்ச்சல்

'வாக்காளர் பட்டியலிலிருந்து தகுதியுள்ளவர்களின் பெயர்களை நீக்க படிவம் 7ஐ சமர்ப்பிப்பது கடுமையான குற்றமாகும்' என உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ