உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  குரங்கின் சேட்டையால் கலைந்தது தேன்கூடு தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பரிதாப பலி

 குரங்கின் சேட்டையால் கலைந்தது தேன்கூடு தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பரிதாப பலி

துமகூரு: துமகூரின் ஜெய்நகர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட மாருதி நகரில், தேன் கூட்டை குரங்கு ஒன்று கலைத்ததால், அதிலிருந்து வெளியேறிய தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 5 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கார் ஷோரூம் ஒன்றின் மேற்பார்வையாளர் விஜய் பிரகாஷ், 65. நேற்று மாலை பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, மாருதி நகரில் பி அண்ட் டி குவாட்ரஸ் அருகேயுள்ள மரத்தில் இருந்த தேன்கூட்டை, குரங்கு ஒன்று தன் சேட்டையால் கலைத்தது. உடன், தேன் கூட்டில் இருந்து வெளியேறி தேனீக்கள், அப்பகுதியில் இருந்த பலரையும் கொட்டின. விஜய் பிரகாஷ் தன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அவரையும் சுற்றி வளைத்து தேனீக்கள் கொட்டின. உடன், தன் சட்டையை கழற்றி வீசி, தேனிக்களை விஜய் பிரகாஷ் விரட்ட முயன்றார். இருப்பினும், தேனீக்கள் அவரது முகத்தை தவிர உடலில் பல பாகங்களிலும் கொட்டின. இதனால், கடுமையாக பாதிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . அங்கு தீவிர சிகிச்சை பெற்றும் பயனின்றி உயிர் இழந்தார். இதனால், இறந்தவரின் குடும்பத்தினர் மிகுந்த துயரத்தில் உள்ளனர். தந்தையின் மரணத்தால் நிலைகுலைந்த அவரது மகள் கதறி அழுதார். 'எங்கள் தந்தைக்கு நேர்ந்தது போன்ற ஒரு நிலை இனி யாருக்கு ஏற்படக்கூடாது' என்றும் கூறினார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் ஜெயநகர் போலீஸ் நிலைய எல்லைக்குள் நிகழ்ந்துள்ளது. தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த மேலும், 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை