பெண்ணுக்கு தவறான ஆப்பரேஷன் அரசு மருத்துவமனை மீது குற்றச்சாட்டு
ஹாசன்: இடது காலுக்கு பதிலாக வலது காலில் இளம்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய அரசு டாக்டர்கள் முயன்றது, சர்ச்சைக்கு காரணமாகி உள்ளது. சிக்கமகளூரு மாவட்டத்தின் பூச்சனஹள்ளி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஜோதி, 25, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, விபத்தில் சிக்கினார். இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சை மூலம் காலில் இரும்பு கம்பி பொருத்தப்பட்டது. கடந்த சில வாரங்களாக அந்த காலில் கடுமையான வலி ஏற்பட்டது. சிகிச்சைக்காக ஹாசனின் அரசு ஹிம்ஸ் மருத்துவமனைக்கு ஜோதி வந்தார். பரிசோதித்த டாக்டர்கள், 'அறுவை சிகிச்சை செய்து, இரும்பு கம்பியை அகற்ற வேண்டும்' என்றனர். 22ம் தேதி சந்தோஷ், அஜித் ஆகியோர் அட ங்கிய டாக்டர்கள் குழு, ஜோதிக்கு அறுவை சிகிச்சை செய்ய நியமிக்கப்பட்டனர். அப்போது, இடது காலுக்கு பதிலாக, வலது காலில் டாக்டர்கள் கத்தியால் அறுத்தனர். சில நிமிடங்களிலேயே தவறை உணர்ந்து, அந்த காலில் கட்டுப் போட்டு, இடது காலில் அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சை முடிந்த பின், இரண்டு கால்களிலும் கட்டுப் போடப்ப ட்டிருப்பதை கண்டு, குடும்பத்தினர் விசாரித்தனர். அப்போது தான், டாக்டர்களின் குளறுபடி அம்பலமானது. கோபமடைந்த குடும்பத்தினர், டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர். தகவலறிந்த சக்லேஸ்புரா பா.ஜ., - எம்.எல்.ஏ., மஞ்சுவும், நடவடிக்கைக்கு வலியுறுத்தினார். ''அரசு மருத்துவமனையில், இது போன்ற அலட்சியத்தால், ஏழை நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். அரசு டாக்டர்களே இப்படி இருந்தால், நோயாளிகள் எங்கு செல்வது? டாக்டர்களுக்கு பொறுப்பு வேண்டாமா?,'' என கேள்வி எழுப்பினார். இதை தீவிரமாக கருதிய ஹிம்ஸ் மருத்துவமனை நிர்வாகம், மூன்று பேராசிரியர்கள் அடங்கிய குழு அமைத்து, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஜோதியின் பெற்றோர் கூறுகையில், 'நாங்கள் கூலி வேலை செய்பவர்கள். இரண்டு கால்களும் இருந்தால் மட்டுமே, வேலை செய்து பிழைக்க முடியும். இப்போது எங்கள் மகளின் இரண்டு கால்களையும், அறுத்து காயப்படுத்தியுள்ளனர். வலியால் அவதிப்படுகிறார். டாக்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.