உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கன்னடத்தில் பேசிய ஆந்திர துணை முதல்வர்

கன்னடத்தில் பேசிய ஆந்திர துணை முதல்வர்

சிக்கபல்லாபூர்: ஓய்வு பெற்ற நீதிபதி பிறந்தநாள் விழாவில் கன்னடத்தில் பேசி ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கோபாலகவுடாவின் பிறந்தநாள் விழா சிக்கபல்லாபூர், சிந்தாமணியில் நடந்தது. இதில் ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் நேற்று பங்கேற்றார். அவர் பேசியதாவது: கர்நாடகா மக்களுக்கு நான் தலை வணங்குகிறேன். சிந்தாமணியில் வசிக்கும் என் சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம். கன்னட கலாசாரத்தை பெருமைப்படுத்திய விஸ்வேஸ்வரய்யா, குவெம்பு ஆகியோருக்கு தலை வணங்குகிறேன். உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோபால கவுடாவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். கோலார், சிக்கபல்லாபூர், பெங்களூரு ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்காக நீர்ப்பாசன திட்டத்துக்கு என்னால் இயன்றதை செய்வேன். ஆந்திராவிற்கும், கர்நாடகாவிற்கும் இடையே பல ஆண்டு கால நட்பு உண்டு. ஆந்திராவில் கன்னட பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகளின் வழியே மாணவர்கள் கன்னடம் கற்கின்றனர். கர்நாடகா மீது ஆந்திராவுக்கு மிகுந்த மரியாதை உண்டு. கர்நாடகாவின் கலாசாரத்தை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம். உங்கள் முன் நான், துணை முதல்வராக நிற்கவில்லை. ஒரு மாணவனாக நிற்கிறேன். நீதிபதி கோபாலகவுடா அரசியலமைப்பின்படி நடந்தவர். குரலற்றவர்களின் குரலாக இருந்துள்ளார். பல சமூக பிரச்னைகளில் தன்னார்வத்துடன் பங்கேற்று, நியாயமான தீர்ப்பு வழங்கி உள்ளார். ஆந்திராவின் மறுகட்டமைப்பில் அவரது பங்கு இன்றியைமாயதது. ஓய்வுக்கு பிறகும் நீதிக்கான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். மஞ்சுநாதர் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்கட்டும். ஜெய் ஹிந்த். ஜெய் கர்நாடகா. இவ்வாறு அவர் பேசினார். கன்னடத்தில் தன் உரையை தொடங்கி, 'ஹெய் கர்நாடகா' என கன்னடத்திலே பேசி முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ