மாதம் ரூ.2,000 உயர்த்துவதாக அறிவிப்பு ஆஷா ஊழியர்கள் போராட்டம் வாபஸ்
பெங்களூரு: ‘‘கர்நாடக ஆஷா ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி முதல், மதிப்பூதியம், 2,000 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்,’’ என, முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார். இதனால், 12 நாட்களாக நடத்திய போராட்டத்தை ஆஷா ஊழியர்கள் வாபஸ் பெற்றனர். மாதம்தோறும் 15,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்க வலியுறுத்தி, பெங்களூரு சுதந்திர பூங்காவில் ஆஷா சுகாதார ஊழியர்கள் கடந்த 12 நாட்களாக போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆஷா ஊழியர்களுடன், சுகாதாரத்துறை அமைச்சர் காதர், நேற்று காலை பேச்சு நடத்தினார். மாதம் 2,000 ரூபாய் மதிப்பூதியம் உயர்த்த, மாநில அரசு முடிவு செய்து உள்ளதாக கூறினார். இதை ஆஷா ஊழியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், பேச்சு தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, பெங்களூரு விதான் சவுதாவில் ஆஷா ஊழியர்களுடன், நேற்று மாலை முதல்வர் சிவகுமார் பேச்சு நடத்தினார். அப்போது, வரும் ஜனவரி முதல் மதிப்பூதியம் 2,000 ரூபாய் உயர்த்தப்படும். ஆனால் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க முடியாது என்று அரசின் நிலையை விளக்கினார். ஒரு வழியாக, இதை ஏற்ற ஆஷா ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கூறினர். பின், சிவகுமார் அளித்த பேட்டி: ஆஷா ஊழியர்களுக்கு சம்பளமாக மாநில அரசு மாதம் 5,000 ரூபாய் வழங்குகிறது. மத்திய அரசு வெறும் 2,000 ரூபாய் மட்டுமே வழங்குகிறது. கடந்த, 3 ஆண்டுகளாக மதிப்பூதியம் உயர்த்தப்படவில்லை என்று ஆஷா ஊழியர்கள், 12 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது மாநில அரசு ஆஷா ஊழியர்களின் மாதாந்திர மதிப்பூதியம் 2,000 ரூபாய் உயர்த்தி வழங்கும்; பணி அடிப்படையில் ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.இவர்களது போராட்டத்தை வைத்து சிலர் அரசியல் செய்ய நினைத்தனர். ஆஷா ஊழியர்கள் போல வேடமணிந்த சிலர் போராட்டத்தில் பங்கேற்றனர். இதை ஆஷா ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. ஆஷா ஊழியர்களின் நலனை காப்பாற்றுவதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. வரும் நாட்களில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.