உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பத்திர பதிவு கட்டணம் உயர்வு கர்நாடகாவில் இன்று முதல் அமல்

பத்திர பதிவு கட்டணம் உயர்வு கர்நாடகாவில் இன்று முதல் அமல்

பெங்களூரு: 'கர்நாடகாவில் பத்திரப் பதிவு கட்டணம், மற்ற மாநிலங்களை விட மிகவும் குறைவாக உள்ளது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு செய்து, பத்திரப் பதிவு கட்டணம் உயர்த்தப்படுகிறது. இது இன்று முதல் அமலுக்கு வருகிறது' என, பத்திரப் பதிவுத்துறை கமிஷனர் முல்லை முகிலன் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கர்நாடகாவில் பத்திரப் பதிவு கட்டணம் 6.6 சதவீதமாக இருந்தது. இது மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால், மிகவும் குறைவாகும். தமிழகத்தில் 9 சதவீதம், கேரளாவில் 10 சதவீதம், ஆந்திராவில் 7.5 சதவீதம், தெலுங்கானாவில் 7.5 சதவீதம் பத்திரப் பதிவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பத்திரப் பதிவு மற்றும் ஆவணங்கள் அச்சிடும் கட்டணங்கள் குறித்து, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்த்து, கர்நாடகாவில் பத்திரப் பதிவு கட்டணம், ௧ சதவீதத்தில் இருந்து, ௨ சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இந்த புதிய கட்டணம் இன்று முத ல், அமலுக்கு வருகிறது. ஏற்கனவே பத்திரங்களை பதிவு செய்வதற்காக தாக்கல் செய்யப்பட்ட மற்றும் பரிசீலனையில் உள்ள சொத்து மதிப்பு, மீண்டும் மதிப்பிடப்படும். இந்த பத்திரங்களை பதிவு செய்ய, புதிய கட்டணம் அடிப்படையில் வசூலிக்கப்படும். அந்தந்த சொத்துதாரர்கள், பத்திரப் பதிவுத்துறை இணைய தளம் மூலம் செலுத்த, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பழைய பதிவு கட்டணத்தை செலுத்தி, பத்திரங்களை பதிவு செய்ய அப்பாயின்ட்மென்ட் பெற்றவர்கள் அல்லது பெறாதவர்கள், புதிய கட்டண உயர்வு அடிப்படையில் செலுத்த வேண்டும். இது தொடர்பாக தகவல்கள், உத்தரவுகள் சொத்துதாரர்களின் மொபைல் போனுக்கு அனுப்பப்படும். பத்திரப் பதிவு தாமதமாவதை தவிர்க்க, துறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, வரும் நாட்களில், துறையின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் கிடைக்க, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி