உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வினய் குல்கர்னியின் ஜாமின் ரத்து செய்ய சி.பி.ஐ., மனு

வினய் குல்கர்னியின் ஜாமின் ரத்து செய்ய சி.பி.ஐ., மனு

பெங்களூரு : தார்வாட் மாவட்ட பஞ்சாயத்து பா.ஜ., உறுப்பினர் யோகேஷ் கவுடா, 2016 ஜூன் 15ம் தேதி, தார்வாடில் உடற் பயிற்சி மையம் அருகில், வெட்டி கொலை செய்யப்பட்டார். முதலில் தார்வாட் போலீசார் விசாரணை நடத்தி, சிலரை கைது செய்தனர். 2020ல் அன்றைய பா.ஜ., அரசு, இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு ஒப்படைத்தது.விசாரணையை துவக்கிய சி.பி.ஐ., யோகேஷ் கவுடா கொலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி உட்பட, பலருக்கு தொடர்பிருப்பதை கண்டுபிடித்து கைது செய்தனர். மாதக்கணக்கில் சிறையில் இருந்த இவருக்கு, கீழ் நிலை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஜாமின் நிராகரித்தன. அதன்பின் உச்ச நீதிமன்றத்தை நாடி ஜாமின் பெற்று கொண்டார்.சி.பி.ஐ., தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே வினய் குல்கர்னி, சந்திரசேகர் இன்டிக்கு, அளிக்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய கோரி, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்துள்ளது.இம்மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றம், 'உச்சநீதிமன்றம் அளித்துள்ள ஜாமினை, செஷன்ஸ் நீதிமன்றம் ரத்து செய்ய முடியுமா, இம்மனு விசாரணைக்கு தகுதியானதா' என, கேள்வி எழுப்பியது. அப்போது ஆஜரான சி.பி.ஐ., தரப்பு சிறப்பு வக்கீல் கங்காதர் ஷெட்டி, ''வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சிகளுக்கு மிரட்டல் உள்ளதால், அவர்கள் சாட்சியம் கூற அஞ்சுகின்றனர். சாட்சிகளுக்கு பணத்தாசை காட்டப்படுகிறது, எனவே ஜாமின் ரத்து கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டும்,'' என்றார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், விசாரணையை இன்று தள்ளி வைப்பதாக அறிவித்தார். ஒருவேளை ஜாமின் ரத்தானால், வினய் குல்கர்னி மீண்டும் சிறைக்கு செல்ல நேரிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை