உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அனுமதியில்லாத கட்டடங்கள் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

அனுமதியில்லாத கட்டடங்கள் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

பெங்களூரு: ஜி.பி,ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் உட்பட, மாநில உள்ளாட்சி எல்லையில் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு அளிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து, முதல்வர் சித்தராமையா நேற்று ஆலோசனை நடத்தினார். பெங்களூரின், முதல்வரின் அலுவலக இல்லமான கிருஷ்ணாவில் இந்த கூட்டம் நடந்தது. முறைப்படி அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடங்களை இடித்துத் தள்ளும்படி, உச்ச நீதிமன்றம் 2024 டிசம்பர் 17ல் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு, நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். எனவே இந்த உத்தரவு செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யும்படி, அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். உச்ச நீதிமன்ற உத்தரவால், புதிய கட்டடங்களுக்கு மின்சாரம், குடிநீர் இணைப்பு அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசின் முடிவு மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். முறையான அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முறைப்படுத்த, சட்டத்தில் இடம் உள்ளதா என்பது பற்றி, கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவு வெளியாவதற்கு முன்பு, கட்டப்பட்ட வீடுகளுக்கு மின்சாரம், குடிநீர் இணைப்பு அளிக்க சட்டத்தில் உள்ள வாய்ப்புகள் குறித்து, அக்டோபர் 8ம் தேதி, மீண்டும் ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டது. அன்றைய தினம் அரசு தலைமை செயலர், அட்வகேட் ஜெனரல், முதல்வரின் சட்ட ஆலோசகர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை