எஸ்.டி., சமூக இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் வால்மீகி ஜெயந்தியில் முதல்வர் சித்தராமையா பேச்சு
பெங்களூரு : “எஸ்.டி., பிரிவில் சேர்த்தால், குருபா சமூகத்தின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்,” என, வால்மீகி ஜெயந்தி நிகழ்ச்சியில், முதல்வர் சித்தராமையா கூறினார். பெங்களூரு, விதான் சவுதா விருந்து மண்டபத்தில், வால்மீகி ஜெயந்தி நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து முதல்வர் சித்தராமையா பேசியதாவது: ராமகிருஷ்ண ஹெக்டே முதல்வராக இருந்தபோது, வால்மீகி, குருபா சமூகங்களை எஸ்.டி., பிரிவில் சேர்க்கும்படி, நானும், முன்னாள் எம்.பி., உக்ரப்பாவும் கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இரு சமூகங்களையும், எஸ்.டி., பிரிவில் இணைக்க மத்திய அரசுக்கு ராமகிருஷ்ண ஹெக்டே சிபாரிசு செய்தார். அவரின் முயற்சி தோல்வி அடைந்தது. ஆனாலும் உக்ரப்பா விடவில்லை. சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது தேவகவுடா மூலம், வால்மீகி சமூகத்தை எஸ்.டி., பிரிவில் உக்ரப்பா இணைத்தார். அவரது பங்களிப்பை மறக்க முடியாது. எஸ்.சி., மற்றும் எஸ்.டி., சமூகங்கள் மேம்பாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கியது, காங்கிரஸ் அரசு தான். பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, குருபா சமூகத்தை எஸ்.டி., பிரிவில் இணைக்க போராடினார். முதல்வராக இருந்த பசவராஜ் பொம்மை, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையில் சில விளக்கங்கள் கேட்கப்பட்டிருந்தன. குருபா சமூகத்தை எஸ்.டி., பிரிவில் இணைத்தால், அச்சமூகத்துக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். இதை நான் ஆதரிக்கிறேன். யாரும், யாருடைய தட்டில் இருந்து உணவை பறிக்கக் கூடாது. வால்மீகி எழுதிய ராமாயணத்தை பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்ற உக்ரப்பாவின் கோரிக்கையை, அரசு நேர்மையாக பரிசீலிக்கும். பெங்களூரில் ஏதாவது ஒரு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு, வால்மீகி பெயர் வைக்க வேண்டும் என்று கோரிக்கை உள்ளது. இதுபற்றி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வேன். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி., உக்ரப்பா பேசுகையில், ''குருபா சமூகத்தை, எஸ்.டி., பிரிவில் சேர்த்தால் மட்டும் போதாது. இடஒதுக்கீட்டில் எங்களுக்கு, 14 சதவீதம் வழங்க வேண்டும். அநீதி நடந்தால் அமைதியாக இருக்க மாட்டேன். மக்களுடன் நின்று போராடுவேன்,'' என்றார்.