மாணவிக்கு பாலியல் தொல்லை: கல்லுாரி ஹெச்.ஓ.டி., கைது
பெங்களூரு, : தனியார் கல்லுாரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, ஹெச்.ஓ.டி.,யை போலீசார் கைது செய்தனர். பெங்களூரு, திலக் நகர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட, தனியார் கல்லுாரியில், 19 வயது மாணவி பி.சி.ஏ., மூன்றாம் ஆண்டு படிக்கிறார். இதே கல்லுாரியில் பி.சி.ஏ., பிரிவு தலைவராக பணியாற்றுபவர் சஞ்சீவ்குமார் மண்டல், 45. இவர் மாணவியுடன் நன்றாக பேசுவார். கடந்த 2ம் தேதி, உணவருந்த வீட்டுக்கு வரும்படி, மாணவியை சஞ்சீவ் மண்டல் அழைத்தார். வீட்டில் மனைவியும், பிள்ளைகளும் இருப்பதாக கூறியதால், மாணவியும் ஜெயநகரின் 9வது ஸ்டேஜ் கார்ப்பரேஷன் காலனியில் உள்ள, சஞ்சீவ் குமார் மண்டலின் வீட்டுக்கு சென்றார். அங்கு சென்றபோதுதான், வீட்டில் யாரும் இல்லை என்பது தெரிந்தது. பயந்த மாணவி, அங்கிருந்து புறப்பட முயற்சித்தார். அப்போது சஞ்சீவ்குமார் மண்டல், மாணவி தோள் மீது கைவைத்து, கூந்தலை வருடி பாலியல் தொல்லை கொடுத்தார். 'நீ வகுப்புக்கு ஆஜரான நாட்கள் குறைவாக உள்ளன. நீ அனைத்து நாட்களும் வந்ததாக, அட்டென்டன்ஸ் போடுகிறேன். அதிக மதிப்பெண் கிடைக்கும்படி செய்கிறேன். வேண்டுமானால் பணமும் கொடுக்கிறேன். என்னுடன் ஒத்துழை' என்றார். அதிர்ச்சி அடைந்த மாணவி, 'என் தோழியிடம் இருந்து போன் வந்துள்ளது. விரைவில் செல்ல வேண்டும்' என கூறிவிட்டு, அங்கிருந்து தப்பி வெளியே வந்தார். தன் வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் நடந்ததை கூறினார். இதுகுறித்து, திலக்நகர் போலீஸ் நிலையத்தில், பெற்றோர் புகார் அளித்தனர். கல்லுாரி நிர்வாகத்திடமும் புகார் அளித்தனர். புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், நேற்று முன்தினம் ஹெச்.ஓ.டி., சஞ்சீவ்குமார் மண்டலை கைது செய்தனர். பின், ஸ்டேஷன் ஜாமினில் விடுதலை செய்தனர்.