உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரூ.3.75 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவரை கொலை செய்தாரா மனைவி?

ரூ.3.75 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவரை கொலை செய்தாரா மனைவி?

ஹாவேரி: இன்சூரன்ஸ் பணத்துக்காக, கணவரை மனைவியே கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து மறு விசாரணை நடத்தும்படி குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.ஹாசன் மாவட்டம், அரசிகெரேவை சேர்ந்தவர் தாரேஷ், 35. இவர் சி.ஆர்.பி.எப்., சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் படையில், ஏ.எஸ்.ஐ.,யாக பணியாற்றினார். இவருக்கும், சென்னராயப்பட்டணாவின் நுக்கேஹள்ளி கிராமத்தை சேர்ந்த திவ்யா, 30, என்ற பெண்ணுக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தாரேஷ் தன் மனைவியை நன்றாக பார்த்து கொண்டார். மனைவியின் விருப்பப்படி பெங்களூரின், சந்திரா லே - அவுட்டில் புதிதாக வீடு வாங்கினார். இந்நிலையில், நடப்பண்டு ஜூன் 18ல், தாரேஷ் திடீரென காணாமல் போனார். அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர். ஜூன் 23ம் தேதி, ஹாவேரியின் ஷிகாவி அருகில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாக, மனைவியின் குடும்பத்தினர் கூறினர். எனவே போலீசாரும் வழக்கை முடித்து உடலை ஒப்படைத்தனர். கணவர் இறந்த பின், மனைவி திவ்யாவின் நடவடிக்கை மாறியது. மாமியார், மாமனாரை அலட்சியப்படுத்தினார். அது மட்டுமின்றி, தாரேஷ் இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன், 3.75 கோடி ரூபாய்க்கு அவரை மனைவி இன்சூரன்ஸ் செய்ய வைத்துள்ளார். இந்த பணத்துக்காக அவர், தன் கணவரை கொலை செய்திருக்கலாம் என, தாரேஷின் குடும்பத்தினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே மறு விசாரணை நடத்தும்படி கோரி, சில நாட்களுக்கு முன், எஸ்.பி.,யிடம் தாரேஷின் பெற்றோர் புகார் செய்தனர். எஸ்.பி.,யும், மறு விசாரணை பொறுப்பை டி.எஸ்.பி.,யிடம் ஒப்படைத்துள்ளார். ஹாவேரி எஸ்.பி., யசோதா வன்டகோடி, நேற்று கூறியதாவது: தாரேஷின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார் செய்துள்ளனர். இவர்களின் சந்தேகத்தை வலுவாக்கும் வகையில், தடயவியல் ஆய்வறிக்கையில் சில அம்சங்கள் உள்ளன. பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் மூச்சுத்திணறி இறந்ததாக கூறப்பட்டுள்ளது. உடலில் மதுபானம் இருப்பதும் தெரிந்தது. தங்களின் மகனுக்கு குடிப்பழக்கமே இல்லை என, பெற்றோர் கூறுகின்றனர். மருமகளின் நடத்தையிலும் மாற்றம் தென்படுகிறது. திடீரென தாரேஷை, மனைவி, 3.75 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்ய வைத்திருக்கிறார். இந்த பணத்துக்காக கொலை நடந்ததா என்பது, விசாரணைக்கு பின், தெரிய வரும். நாங்கள் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ