ராகுலுக்கு நோட்டீஸ் கொடுக்க தேர்தல் கமிஷனுக்கு உரிமை இல்லை: சிவகுமார்
பெங்களூரு : “ராகுலுக்கு நோட்டீஸ் கொடுக்க, தேர்தல் கமிஷனுக்கு உரிமை இல்லை. அவர்கள் நியாயப்படி தேர்தலை நடத்த வேண்டும்,” என, துணை முதல்வர் சிவகுமார் கூறினார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: லோக்சபா தேர்தலில் நடந்த முறைகேடு குறித்து, நாட்டு மக்களுக்கு ராகுல் அனைத்து தகவலும் கொடுத்துள்ளார். இப்போது அவருக்கு, கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்ப, தேர்தல் கமிஷன் யார்? நாங்கள் தான் அவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தி, நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். தேர்தலை நியாயமாக நடத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் கமிஷனுக்கு உள்ளது. எதுவாக இருந்தாலும் நாங்கள் சட்டப்படி சந்திப்போம். பெங்களூரு மெட்ரோ 3வது கட்ட துவக்க நிகழ்ச்சியின்போது, பிரதமர் மோடியிடம் நான் எந்த ரகசியமும் பேசவில்லை. நான் துணை முதல்வர், பெங்களூரு நகர பொறுப்பு அமைச்சர். பெங்களூருக்கு என்ன வேண்டும் என்பது பற்றி, பிரதமரிடம் எடுத்துக் கூறினேன். அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொண்டேன். என் கோரிக்கையை பரிசீலிப்பதாக அவர் கூறி உள்ளார். அவரது வார்த்தையில் எனக்கு நம்பிக்கை உள்ளது. பெங்களூரு உலகளாவிய நகரம் என்பதை அவரும் ஏற்றுக் கொண்டுள்ளார். பிரதமருடன் பேசினேன் என்பதற்காக ஏதோதோ பேசுவது சரியல்ல. நான் பா.ஜ.,வுக்கு சென்றுவிட மாட்டேன். நான் 1989 முதல் எம்.எல்.ஏ.,வாக உள்ளேன். எனக்கு வயது குறைவாக இருக்கலாம். அரசியலில் அனுபவம் நிறைய உள்ளது. அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். மற்றபடி நமக்கு மரியாதை தருபவர்களுக்கு நாமும் கொடுப்பது அவசியம். கர்நாடக பா.ஜ., - எம்.பி.,க்கள் வெறும் காலி டப்பாக்கள். அவர்களுக்கு சத்தம் போட்டு பேச மட்டும் தான் தெரியும். பிரதமரிடம் சென்று நிதி வாங்கி வர தெரியாது. தேவைப்பட்டால் எவ்வளவு நிதி வேண்டும் என்று தகவல் தருகிறேன். பா.ஜ., - எம்.பி.,க்கள் வாங்கி வந்து கொடுக்கட்டும். இவ்வாறு அவர் கூறினார்.