உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / லாட்ஜில் தீ விபத்து வாலிபர் தீக்குளித்து தற்கொலை கள்ளக்காதலி மூச்சுத்திணறி பலி

லாட்ஜில் தீ விபத்து வாலிபர் தீக்குளித்து தற்கொலை கள்ளக்காதலி மூச்சுத்திணறி பலி

எலஹங்கா: லாட்ஜ் அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் ஊற்றி வாலிபர் தற்கொலை செய்ததும், அந்த புகையால் மூச்சுத் திணறி இளம்பெண்ணும் இறந்தது தெரிய வந்துள்ளது. கதக்கை சேர்ந்தவர் ரமேஷ், 24. பாகல்கோட்டின் ஹுன்குந்த்தை சேர்ந்தவர் காவேரி படிகர், 25. பெங்களூரு, எலஹங்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரமேஷும், மசாஜ் சென்டரில் காவேரியும் வேலை செய்தனர். மசாஜ் சென்டர் அருகே உள்ள லாட்ஜில் ஒரு அறையில், ரமேஷும், காவேரியும் நேற்று முன்தினம் தங்கி இருந்தனர். அந்த அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவரும் உயிரிழந்தனர். முதலில் இருவரும் உடல்கருகி இறந்ததாக தகவல் வெளியானது. போலீசார் நடத்திய விசாரணையில், ரமேஷ் மட்டும் தீயில் கருகி இறந்ததும், காவேரி மூச்சுத்திணறி இறந்ததும் தெரிய வந்தது. சம்பவத்திற்கான காரணம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறியது: காவேரிக்கு திருமணம் முடிந்து, மூன்று பிள்ளைகள் உள்ளனர். நான்கு மாதங்களுக்கு முன் பெங்களூருக்கு வேலைக்காக வந்தார். கணவரும், மூன்று பிள்ளைகளும் ஹுன்குந்தில் வசிக்கின்றனர். வேலைக்கு வந்த இடத்தில் ரமேஷுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் பல இடங்களுக்கு ஜோடியாக சுற்றினர். ஒரு வாரமாக லாட்ஜில் தங்கி இருந்தனர். கணவர், மூன்று பிள்ளைகளை விட்டுவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி காவேரியிடம் ரமேஷ் கூறி இருக்கிறார். இதற்கு காவேரியிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. இதனால் நேற்று முன்தினம் காலை லாட்ஜ் அறையில் வைத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மாலை வெளியே சென்ற ரமேஷ், பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வந்துள்ளார். காவேரி மீது ஊற்ற முயன்று உள்ளார். உயிரை காப்பாற்றிக் கொள்ள கழிப்பறைக்கு சென்று கதவை உட்பக்கமாக பூட்டிக்கொண்டார். கழிப்பறை கதவை உடைக்க முடியாத கோபத்தில், பெட்ரோலை தன் உடலில் ஊற்றி ரமேஷ் தீக்குளித்தார். தீ மளமளவென வேகமாக பரவி உள்ளது. கழிப்பறைக்குள் இருந்த காவேரியால் வெளியே வர முடியவில்லை. புகைமூட்டத்தில் சிக்கி மூச்சு விட முடியாமல் திணறி அவரும் இறந்துள்ளார். சம்பவம் நடப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன், அந்த அறைக்கு யாரோ ஒருவர் வந்து சென்றுள்ளார். அதுபற்றியும் விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை