கனடா நாட்டு விசா, வேலை வாய்ப்பு பெற்று தருவாக நம்ப வைத்து மோசடி
நந்தினி லே - அவுட்,: பெங்களூரு, நந்தினி லே - அவுட்டின் பரிமளா நகரில் வசிப்பவர் சந்தனா, 25. இவர், கனடா நாட்டில் வேலை செய்ய விரும்பினார்; வேலை வாய்ப்பு தேடினார். சில நாட்களுக்கு முன், 'அவுல்ஸ்ட்ரியாரிடி இந்தியா' என்ற நிறுவனத்தின் விளம்பர அறிவிப்பை கவனித்தார். 'கனடா நாட்டில் பணிக்கு செல்வோருக்கு, விசா பெற்று தரப்படும். அந்நாட்டில் வேலை வாய்ப்பு பெற உதவப்படும். இந்தியாவில் இருந்து செல்வோருக்கு, விமான டிக்கெட் ஏற்பாடு செய்யப்படும்' என அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. விருப்பம் உள்ளவர்கள் நிறுவன இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளும்படி கோரப்பட்டது. இதை நம்பிய சந்தனா, நிறுவனத்தின் இணைய தளத்தில், பதிவு செய்து கொண்டார். நிறுவன அதிகாரி வினய் கோட்டாரி, சந்தனாவுக்கு போன் செய்து, விசா பெற்றுத்தருவதாகவும், வேலை வாய்ப்பு பெற உதவிகளை செய்வதாகவும் கூறினார். ஆரம்பத்தில் 1,500 ரூபாய் செலுத்தும்படி கூறினார். அதன் படி, சந்தனாவும் பணத்தை செலுத்தினார். இதன் பின், சந்தனா, அதிகாரி வினய் கோட்டாரியை சந்தித்தார். அப்போது அவர் 'உங்களுக்கு கனடா நாட்டின் நிரந்தர விசாவும், வேலையும் கிடைக்க செய்கிறேன். இதற்காக ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும்' என்றார். வெளி நாட்டில் வேலை ஆசையில், சந்தனாவும் ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினார். பணி ஒப்பந்த பிரதியை இ - மெயில் மூலமாக, அந்நிறுவனம் அனுப்பியது. பணியில் எப்போது அமர்வது, விசா குறித்து கேட்டும், நிறுவனம் பதில் அளிக்கவில்லை. இதனால் சந்தனா அந்நிறுவன அலுவலகத்துக்கு சென்று விசாரித்தார். அப்போது தான், அவருக்கு போலியான பணி ஒப்பந்த பிரதி வந்தது தெரிய வந்தது. இது போன்று பலரிடம் பணம் வசூலித்து, போலியான இ - மெயில் அனுப்பி மோசடி செய்தது தெரிந்தது. இது குறித்து, புட்டேனஹள்ளி போலீஸ் நிலையத்தில், இரண்டு நாட்களுக்கு முன், சந்தனா புகார் செய்தார். போலீசாரும் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.